Published : 12 Jun 2024 12:44 PM
Last Updated : 12 Jun 2024 12:44 PM
சென்னை: "தமிழகத்துக்கான காவிரி நீரை பெறாமல் டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் நம்பிக்கைத் துரோகம் மன்னிக்க முடியாத குற்றம். கூட்டணி தர்மத்திற்காகவும், சுய நலத்திற்காகவும் மாநில உரிமையை பறிகொடுப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?" என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை நடப்பாண்டில் திறக்கப்படாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் நிரம்பி வழியும் போது, நேரில் சென்று திறந்து வைத்து பெருமை பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நடப்பாண்டுக்கான காவிரி நீரை கர்நாடகாவிலிருந்து கேட்டுப்பெறாமலும், குறுவை சாகுபடியை தொடங்கிய டெல்டா பகுதி விவசாயிகளை கண்டுகொள்ளாமலும், அவர்களின் கோரிக்கைகளையும் காது கொடுத்துக் கேட்க மறுப்பது ஏன்?.
உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டி தமிழக காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கூட்டணி தர்மத்திற்காக வெளிப்படையாக கண்டிக்கக் கூட முடியாத முதல்வர் மு.க.ஸ்டாலின், மேடைக்கு மேடை மாநில உரிமைகளைப் பற்றி முழங்குவது வெட்கக்கேடானது. கர்நாடக அரசு கடந்த ஆண்டு நிலுவையில் வைத்திருக்கும் சுமார் 100 டி.எம்.சி. தண்ணீரை பெறுவதற்கோ, நடப்பாண்டுக்கான காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் மெத்தனப்போக்கு வரும் காலங்களிலும் தொடருமேயானால், டெல்டா பகுதிகள் வறண்டு நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படுவதோடு விவசாயிகள் அனைவரும் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாகும் அவலநிலை ஏற்படும்.
எனவே, இனியாவது முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சுயநலப்போக்கை ஓரம்கட்டி வைத்துவிட்டு தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சட்டரீதியாக உச்சநீதிமன்றத்தை அணுகுவதோடு, காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களின் மூலம் கர்நாடக அரசுக்கு அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தத்தைக் கொடுத்து தமிழகத்துக்கான காவிரி நீரை முழுமையாகப் பெற நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளாவிட்டால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT