Published : 12 Jun 2024 06:02 AM
Last Updated : 12 Jun 2024 06:02 AM
சென்னை: தமிழகத்தில் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்படுவதாகவும், இவ்வகை பேருந்துகளைபயணிகள் தவிர்க்கவும் போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மோட்டார் வாகனச் சட்டம்1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (ஏஐடிபி) வழங்க அதிகாரம் அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் பயணிகள் பேருந்துகள்போல் மின்னணு முன்பதிவு நிறுவனங்கள் மூலம் பயணச்சீட்டுகளை வழங்கி, கட்டணத்தை வசூலிக்கின்றன. இவ்வாறு நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, ஏஐடிபி வாகனங்களின் இயக்கத்தை நெறிப்படுத்தும் நோக்கில் நாளை (ஜூன் 13) முதல் அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் எப்போதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும்.
நிபந்தனை மீறினால் நடவடிக்கை: அதில் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் புறப்படும் இடம் மற்றும்சேருமிடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் பதிவுகளை பராமரிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கான பயண விவரங்கள் வைத்திருப்பதோடு, அதிகாரிகளின் தேவைக்கேற்ப சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மோட்டார்வாகன துறை, மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில் தமிழகத்துக்குள் பயணித்த விவரங்கள், சுற்றுலா முடிவுறும்போது வெளியேறும் விவரம் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும்போது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இவ்வகை அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் 652 அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களில் 105 வாகனங்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து, டிஎன் என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு தமிழகத்துக்குள் இயங்க அனுமதி சீட்டும் பெற்றுள்ளன. மீதமுள்ள 547 வாகனங்கள் விதிகளை மீறி இயங்குகின்றன.
எனவே வரும் 14-ம் தேதி நள்ளிரவு முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது.
அரசு பொறுப்பேற்காது: எனவே முறையற்ற வகையில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும்தவிர்க்க வேண்டும். மீறி பயணம்செய்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும். அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று முறையாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் அதற்குரிய சான்றுகளை வாகன தணிக்கையின்போது காண்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT