Published : 12 Jun 2024 05:22 AM
Last Updated : 12 Jun 2024 05:22 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள் காரணமாக சட்டப்பேரவை கூடும் தேதி ஜூன் 20-க்கு மாற்றம்

சென்னை: மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக ஜூன் 24-ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்ட சட்டப்பேரவை கூட்டம், 4 நாட்கள்முன்னதாக ஜூன் 20-ம் தேதிதொடங்க உள்ளது.

சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 15-ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டு, 22-ம் தேதி வரை விவாதம் நடைபெற்றது.

பிறகு, மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், துறைகள் தோறும் நிதி ஒதுக்கத்துக்கான மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படாமல், பேரவை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்கும் என்று பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

இந்த நிலையில், பேரவை கூடும் தேதி ஜூன் 24-ல் இருந்து ஜூன் 20-ம் தேதிக்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 24-ம் தேதிக்கு பதிலாக, ஜூன் 20வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பேரவை தலைவர் கூட்டியுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14 தொடங்குகிறது. 24-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடந்து, 26-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதை கருத்தில் கொண்டு, சட்டப்பேரவை கூடும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே அறிவித்தபடி, அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று நடக்கிறது. கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என, இதில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x