Published : 12 Jun 2024 05:08 AM
Last Updated : 12 Jun 2024 05:08 AM

கூட்டுறவு வங்கிகளால் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் ரூ.5 லட்சமாக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனங்களால் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.1 லட்சத்தில் இருந்துரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தால், மாணவிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

அதேநேரம், உயர்கல்வியை பொருத்தவரை, ஏழை, நடுத்தரமாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவது அவர்களது குடும்பத்துக்கு பெரும் சுமையாக உள்ளது. இதனால், அவர்கள் கல்விக் கடன் பெற முனைப்பு காட்டுகின்றனர். வங்கிகளில் கடன் பெறுவதில் சிக்கல்கள் எழும் நிலையில், அரசின் உதவியை நாடுகின்றனர்.

இதற்கிடையே, தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளில் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரைமட்டுமே கல்விக் கடன் வழங்கஅனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், அரசின் பல்வேறு திட்டங்கள் காரணமாக, மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்வியில் சேர்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு,கூட்டுறவு துறை மூலம் வழங்கப்படும் கடன் தொகையின் அளவை தமிழக அரசு ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு துறைஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புத்தகம், விடுதி, உணவு, பயிற்சி உள்ளிட்ட வகைகளில் கல்வி கட்டணங்களை செலுத்த ஏதுவாக மாணவர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டு வந்தது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, தற்போது இந்த கல்விக் கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாணவர்கள், பயிலும் காலம்முடிந்து 6 மாதங்கள் கழித்துஅடுத்து வரும் 5 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இதற்கான அதிகபட்ச வட்டி 10 சதவீதம் ஆகும்.

அங்கீகாரம் பெற்ற பட்டய படிப்பு, இளங்கலை பட்டப்படிப்பு மட்டுமின்றி முதுகலை பட்டப் படிப்பு, தொழில்முறை படிப்புகளுக்கும் கூட்டுறவு நிறுவனங்கள் கல்விக் கடன் வழங்குகின்றன. முதல் ஆண்டுமட்டுமின்றி 2, 3-ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால் (டாம்கோ) சிறுபான்மையின மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை மாணவர்கள் அணுகி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கல்விக் கடனை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நிபந்தனை, வழிமுறைகள்: இதைத் தொடர்ந்து, கூட்டுறவு நிறுவனங்களுக்கு கூட்டுறவுசங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கடன் நிபந்தனைகள், வழிமுறைகள் குறித்து அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.1 லட்சம் வரை பிணையின்றி கடன் வழங்கலாம். ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும் கடனுக்கு 100 சதவீதம் பிணை பெறவேண்டும். படிப்புக்கான பயிற்சிகட்டணம், விடுதி, உணவு, ஆய்வகம், புத்தக கட்டணங்களை சேர்த்து கல்விக் கடன் வழங்கப்படும்.

கடனுக்கான வட்டி விகிதத்தை அந்தந்த வங்கியில் உள்ள சொத்து பொறுப்பு குழு நிர்ணயிக்கும். இணைப்புசங்கங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை, நிதியுதவி அளிக்கும் வங்கி நிர்ணயிக்கும். மேலும், நகர கூட்டுறவு வங்கிகள் தவிர, இணைப்பு சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு, அந்த சங்கங்கள் இணைக்கப்பட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து கடன் பெற்று வழங்க வேண்டும்.

வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு, பெற வேண்டிய ஆவணங்களை பெற்று கடன் வழங்க பரிசீலிக்க வேண்டும். டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ மூலம் வழங்கப்படும் கல்விக் கடன்களுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும்.

உரிய காலத்தில் திருப்பி செலுத்தாத பட்சத்தில், கடனை வசூலிக்க இதர கடன்களுக்கு பின்பற்றப்படும் சட்டப்பூர்வ வழிமுறைகள் இதிலும் பின்பற்றப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x