Last Updated : 11 Jun, 2024 07:14 PM

 

Published : 11 Jun 2024 07:14 PM
Last Updated : 11 Jun 2024 07:14 PM

ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை: உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுமதி

சென்னை: நேரடி படிப்புகளுக்கும் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது.

நம்நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடி படிப்புகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் படிப்பில் சேர ஓராண்டு காத்திருக்க வேண்டும். மறுபுறம் திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கற்றல் முறைகளில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடைமுறை அமலில் உள்ளது. இதற்கு பரவலாக வரவேற்புள்ளதை அடுத்து நேரடி படிப்புகளுக்கும் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்வதற்கு உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.

இது குறித்து யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நடப்பு கல்வியாண்டு(2024-25) முதல் ஜூலை-ஆகஸ்ட் மற்றும் ஜனவரி - பிப்ரவரி என ஆண்டுக்கு இரு முறை உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை நடத்தி கொள்ளலாம்.

இத்திட்டம் தேர்வு முடிவுகள் தாமதம், உடல்நலப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு காரணங்களால் ஜூலை-ஆகஸ்ட் மாத சேர்க்கையில் சேர முடியாதவர்களுக்கு பலன் தரும். அதேபோல், தொழில் நிறுவனங்களும் வளாக நேர்காணலை ஆண்டுக்கு 2 முறை நடத்தலாம்.

உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழங்கள் இத்தகைய சேர்க்கை நடைமுறையைத்தான் பின்பற்றுகின்றன. இதன்மூலம் உலகளாவிய கல்வி தரங்களுடன் இணைந்து போட்டியிட்டு மேம்பட முடியும். அதேநேரம் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை என்ற நடைமுறையை உயர் கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவது கட்டாயமில்லை.

தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், வளர்ந்து வரும் பகுதிகளில் புதிய பாடத்திட்டங்களை வழங்குவதற்கும் இந்த நடைமுறை உதவிகரமாக இருக்கும்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x