Last Updated : 11 Jun, 2024 01:24 PM

 

Published : 11 Jun 2024 01:24 PM
Last Updated : 11 Jun 2024 01:24 PM

புதுச்சேரி விஷவாயு கசிவில் மூவர் உயிரிழப்பு: முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏற்பட்ட விஷவாயு கசிவு மேலும் பரவாமல் தடுக்க ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விஷவாயு கசிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்று பெண்கள் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாநில முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.பி.,க்கள் செல்வ கணபதி, வைத்திலிங்கம், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏக்கள் சிவசங்கர், சம்பத், செந்தில்குமார், ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும், அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனர். அவர்களிடம் நடந்த விவரங்களை முதல்வர் ரங்கசாமி கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “விஷ வாயு பரவாமல் தடுக்க ரெட்டியார்பாளையம் பகுதியில் மட்டுமில்லாமல் புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்யப்படும். விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்” என்றார்.

செந்தாமரை, செல்வராணி, காமாட்சி,

அதைத்தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், “பாதாள சாக்கடை தரம் குறித்து ஆய்வு செய்யப்படும். அதில் தவறு நடந்திருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். விஷவாயு பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இதனிடையே, சுற்றுச்சூழல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து எவ்வித வாயு பரவியது என ஆய்வு மேற்கொண்டனர். அதே சமயம் புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 3 தெருக்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

பாதிக்கப்பட்ட தெரு மட்டும் சீல் வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வசித்த மக்கள் முகக் கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளனர். அப்பகுதியில் இருந்த 200 வீடுகளில் இருந்த மக்கள் பாதுகாப்புடன் அருகேயுள்ள இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மதிய உணவு வழங்க அரசு ஏற்பாடு செய்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x