Published : 11 Jun 2024 11:52 AM
Last Updated : 11 Jun 2024 11:52 AM

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு, கல்வி மிகவும் அவசியமாகும். அவ்வாறு கல்லூரி கல்வி பயிலும் மாணவர்களுக்கு குடும்ப வருமானம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என கருதி, தமிழக முதல்வரின் உத்தரவுபடி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாணவர்களின் புத்தக கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம், டியூஷன் கட்டணம் போன்று பல்வேறு கல்வி கட்டணங்களை செலுத்த ஏதுவாக ரூ. 1 லட்சமாக வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 வருடங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இக்கல்விக் கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 10% ஆகும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் அங்ககீகரிக்கப்பட்ட பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மட்டுமின்றி, முதுகலைப் பட்டப் படிப்புக்கும், தொழில்முறை படிப்புகளுக்கும் (professional courses) கூட்டுறவு நிறுவனங்கள் கல்விக் கடன் வழங்குகின்றன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) சிறுபான்மையின மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக் கடன் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நிறுவனங்களை மாணவர்கள் அணுகி, உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து, கல்விக் கடனை பெற்று மாணவர்கள் தங்களின் கல்விக் கனவை நனவாக்கிக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x