Published : 13 May 2018 10:19 AM
Last Updated : 13 May 2018 10:19 AM
புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.17 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள 568 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகரெட், பீடி, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் மெல்லும் வகையிலான புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள்.
எனவே, தமிழ்நாட்டில் புகையிலை மற்றும் நிக்கோட்டின் உள்ள குட்கா, பான் மசாலா மற்றும் வாயில் மெல்லக் கூடிய புகையிலைப் பொருட்களைத் தயாரிக்க, இருப்பு வைக்க, விற்பனை செய்ய தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. இந்த தடை ஆணையைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான காண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பது தெரியவந்தால் அவற்றை போலீஸார், மாநில உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2013 ஜூன் முதல் 2018 மார்ச் வரையிலான 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 4 ஆயிரம் கடைகளில் இருந்து உணவு பாதுகாப்புத் துறையினர் 567.62 டன் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு மட்டும் ரூ.17 கோடியே 8 லட்சம் ஆகும்.
இதில், கடந்த 2016-17-ம் ஆண் டில் நடைபெற்ற சோதனையில் 19,139 கடைகளில் இருந்து குட்கா, பான் மசாலா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கையானது 2017-18-ம் ஆண்டில் 23,605 கடைகளாக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட் கள் விற்பது குறித்து கிடைக்கும் தகவல்கள் அடிப்படையிலும், திடீர் சோதனைகள் நடத்தியும் பறிமுதல் செய்து வருகிறோம். பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி, அந்த முடிவுகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்றம் அபராதம் விதித்து வருகிறது. எங்கிருந்து மாதிரி எடுக்கப்படுகிறதோ அந்த கடையின் உரிமையாளர், புகையிலை பொருள் பாக்கெட்டில் முகவரி இருந்தால் அதன் தயாரிப்பாளர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறோம்.
எங்கேனும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து தெரிந்தால் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் உணவு பாதுகாப்புத் துறையைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
ரயில்கள் மூலம் கடத்தல்
தமிழகத்தில் கிடைக்கும் பெரும்பாலான புகையிலைப் பொருட்கள் ஆந்திரா, டெல்லி, புனே போன்ற இடங்களில் இருந்து ரயில்கள் மூலம் கடத்தி வரப்படுகின்றன என்கிறார் புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிறில் அலெக்சாண்டர். அவர் மேலும், கூறும்போது, “தடையைமீறி தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹான்ஸ் உற்பத்தி இங்கு கிடையாது. அவை வெளிமாநிலங்களில் இருந்துதான் தமிழகத்துக்கு வருகின்றன.
உதாரணத்துக்கு பஞ்சாபில் புகையிலை பொருட்களை விற்பதில்லை. ஆனால், அங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் தமிழகத்துக்கு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பான் மசாலா தயாரிக்க உரிமம் அளித்துள்ளனர். அண்மையில், கோவை கண்ணம்பாளையத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு பான்மசாலா தயாரிக்க மட்டும் அனுமதி வாங்கிவிட்டு, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களையும் தயாரித்துள்ளனர்” என்றார்.
பான்மசாலா தயாரிப்பு ஆலைகளுக்கு உரிமம் வழங்குவதை தமிழக அரசு தடைசெய்ய வேண்டும். மேலும், புகையிலை பொருட்களை முற்றாக ஒழிப்பது குறித்து கொள்கை அளவில் அரசு முடிவெடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT