Published : 30 Aug 2014 10:00 AM
Last Updated : 30 Aug 2014 10:00 AM

5,000-க்கும் மேல் விநாயகர் படம், ஸ்டாம்ப், கரன்சி: குமரியில் அசத்தும் பிள்ளையார் பிரதர்ஸ்

தீபாவளி, பொங்கல் பண்டிகை களுக்கு இணையான பண்டிகை தான் விநாயகர் சதுர்த்தி. சிலைகளை வழிபாட்டுக்கு பிரதிஷ்டை செய்து, அவற்றை கடலில் கரைப்பது வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது இப்பண்டிகை.

விநாயகர் உருவ விக்கிரகங்களையும், புகைப்படங்களையும் 5,000-க்கு மேல் சேமித்து, வைத்திருக்கின்றனர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர். சுசீந்திரம், ஆஸ்ராமம் கிராமத்தில் அக்ரஹார தெருவுக்குள் நுழைந்து ராம்ஜி, சங்கர்ஜி சகோதரர்கள் வீட்டுக்கு விலாசம் கேட்டாலே, `பிள்ளையார் பிரதர்ஸா?’ என்று கேட்டு அடையாளம் சொல்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.

வீடு நிறைய விதவிதமான விநாயகர் சிலைகள். மிகச்சிறிய அளவில் இருந்து தொடங்குகிறது சிலைகளின் உருவம். இதே போல் ஏராளமான ஆல்பங்களில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர், நர்த்தன விநாயகர், பார்வதி பரமசிவன் சகிதம் உள்ள விநாயகர், வல்லப விநாயகர், சித்தி புத்தி விநாயகர், மயில்மேல் விநாயகர் என நீண்டுகொண்டே செல்கிறது பட்டியல்.

இளைய சகோதரர் சங்கர்ஜி கூறியதாவது: தோப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக உள்ளேன். என் சகோதரர் ராம்ஜி வயலின் கலைஞர். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் இந்த விநாயகர் கலெக் ஷன்களை செய்துவருகிறோம். 1997-ல் தமிழக அளவில் சென்னையில் நடைபெற்ற தபால் தலை கண்காட்சியில் கலந்து கொண்டு இசையும், நாட்டியமும் என்ற தலைப்பில் காட்சிக்கு வைத்திருந்தேன். முதல் பரிசு கிடைத்தது.

அந்த கண்காட்சியில் ஏராளமானோர் கிறிஸ்துமஸ், மெக்கா மதினா கலெக்ஷன்ஸ் வைத்திருந்தனர். அதைப் பார்த்து விட்டு விநாயகர் சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கினேன். நான் தீவிரமான விநாயகர் பக்தர் என்பது கூட அதற்கு ஒரு காரணம். விநாயகரை வணங்கி செய்தால் எந்த செயலும் வெற்றிபெறும் என்பது ஐதீகம். அப்படிப் போட்ட பிள்ளையார் சுழி இப்போது 5,000-க்கும் அதிகமான படங்களை தாண்டிவிட்டன.

மங்கோலியா, நெதர்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகள் விநாயகர் உருவம் பொதித்த கரன்சி நோட்டுக்களை வெளி யிட்டுள்ளன. அவற்றையும் சேகரித்து வைத்துள்ளேன். நான் காலண்டரில் இடம்பெறும் பல்வேறு வடிவங்களில் விநாயகர் படத்தையும் சேகரித்துள்ளேன்.

இதேபோல் ஷேர் ஆட்டோ டிக்கெட் கட்டணத்தின் பின்புறம் விநாயகர் உருவம் வரையப்பட்டிருக்கும். இந்த கலெக்ஷ னுக்காகவே ஷேர் ஆட்டோ ஏறி நாகர்கோவில் முழுவதும் ரவுண்ட் வருவேன்” என்று கூற, தொடர்கிறார் அவரது சகோதரர்ராம்ஜி.

`கிழக்கிந்திய கம்பெனிகளின் காலகட்டத்தில் விநாயகர் உருவம் பொதித்து வெளியிடப்பட்ட காசு இப்போது எங்கள் சேகரிப்பில் இடம் பெற்றுள்ளது. மாக்கல்லினால் செய்யப்பட்ட விநாயகரை வாங்க விரைவில் திருப்பரங்குன்றம் செல்ல இருக்கிறோம்.

தாய்லாந்து நாட்டில் 3 ரூபாய் ஸ்டாம்பில் விநாயகர் உருவம் உள்ளது. அதுவும் எங்கள் சேகரிப்பில் இருக்கிறது. அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் இன்னும் ஏராளமான கலெக்ஷன்களை சேகரிக்க முயற்சித்து வருகிறோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x