Published : 10 Jun 2024 07:55 PM
Last Updated : 10 Jun 2024 07:55 PM
சென்னை: “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது” என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மறைவால், அத்தொகுதி காலியாக இருந்தது. இ்ந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி உட்பட நாடு முழுவதும் 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி வரும் ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது: “விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போதிலிருந்து தொகுதி சார்ந்த விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.
மாவட்டத்தில், பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும். ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொக்கம் எடுத்துச்செல்ல ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்பது உட்பட தேர்தல் விதிகளில் கூறப்பட்ட அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் அமலில் இருக்கும்.
நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ஏற்கெனவே உள்ள அரசு நலத்திட்டங்கள் தொடரலாம். சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடக்கூடாது. புதிய திட்டங்களையும் விழுப்புரத்தில தொடங்கக்கூடாது.
தேர்தல் விதிமீறல் ஏதேனும் வருமானால் அரசே தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரும். தேர்தல் பாதுகாப்புக்காக வாக்குப்பதிவுக்கு முன்னதாகவும், வாக்குப்பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் துணை ராணுவப்படை வீரர்களை தேர்தல் ஆணையம் அனுப்பும்.
கட்சிகளுக்கான அங்கீகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். இது தொடர்பான தகவல்கள் எதுவும் வரவில்லை. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், சின்னம் ஒதுக்குவது தொடர்பாக அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரே முடிவெடுப்பார்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT