Published : 10 Jun 2024 04:13 PM
Last Updated : 10 Jun 2024 04:13 PM

வண்டலூர் அருகே மருத்துவமனை அமைக்க தனியாருக்கு ஒதுக்கப்பட்ட நில ஒதுக்கீட்டு ரத்து செல்லும்: ஐகோர்ட்  

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா சாலை அருகே மருத்துவமனை அமைக்க ரூ.200 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியார் அறக்கட்டளைக்கு ஒதுக்கிய, ஒதுக்கீட்டை ரத்து அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆரோன் சாமுவேல் மருத்துவமனை சொசைட்டி சார்பில் ஜி.ஆரோன் தேவதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது மருத்துவமனை சொசைட்டி சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக வண்டலூர், பெருங்களத்தூர் பகுதியில் வேளாண் துறைக்கு சொந்தமான 20 ஏக்கர் அரசு நிலம் கடந்த 1969-ம் ஆண்டு ஏக்கர் ரூ.300 வீதம் எங்களது சங்கத்துக்கு ஒதுக்கப்பட்டது.

பின்னர் ரூ. 60 ஆயிரமும் அந்த நிலத்துக்காக அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு வண்டலூர் பகுதியில் உயிரியல் பூங்கா அமைப்பதற்கு தேவைப்படுவதாகக்கூறி எங்களுக்கு வழங்கப்பட்ட அந்த 20 ஏக்கர் நிலத்தை திருப்பி எடுத்துக்கொண்ட தமிழக அரசு அதற்குப்பதிலாக வனத்துறைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கடந்த 1975-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில் அந்த 20 ஏக்கரில் சில பகுதிகளை ஆக்கிரமித்த வனத்துறை அந்த பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளது. இதை அகற்றும்படி கோரியும் வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தில் மருத்துவமனை அமைக்க தடையில்லா சான்று வழங்க மறுத்த வனத்துறை, தற்போது அந்த நிலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்குள் மருத்துவமனை அமைக்கப்படவில்லை எனக்கூறி எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்துக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்து தமிழக அரசு கடந்த 2009-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.

இது சட்டவிரோதமானது. வனத்துறை நட்டுவைத்த மரக்கன்றுகளை அகற்றாத காரணத்தாலும், தடையில்லா சான்று வழங்காததாலும் எங்களால் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே ஒதுக்கீட்டை ரத்து செய்த தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்து, அந்த நிலத்தை மருத்துவமனை அமைப்பதற்காக எங்களிடமே ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சேஷசாயி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர். ரமன்லால் ஆஜராகி, மருத்துவமனை அமைப்பதாகக்கூறி அந்த சங்கம் பெற்ற 20 ஏக்கர் அரசு நிலத்தில் எந்தவொரு பணிகளையும் தொடங்கவில்லை. எனவே, அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் எந்தவொரு விதிமீறலும் இல்லை.

எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், என வாதிட்டார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். ராஜராஜன், வனத்துறை மரக்கன்றுகளை நட்டுவைத்து, தடையில்லா சான்று வழங்க மறுத்த காரணத்தால் தான் மருத்துவமனை பணிகளை தொடங்க முடியவில்லை. எனவே ஒதுக்கீட்டை ரத்து செய்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும், என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அந்த சங்கத்துக்கு வழங்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்துக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்து அரசு பிறப்பித்த உத்தரவில் எந்த விதிமீறலும் இல்லை. அந்த அரசாணை செல்லும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x