Published : 10 Jun 2024 03:05 PM
Last Updated : 10 Jun 2024 03:05 PM
உதகை: உதகை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த இன்று (திங்கள்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர்மன்றத்தின் ஒப்புதல் பெற நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமையில் அவசர கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டம் உதகை மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான உதகை நகராட்சி 36 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக 1987 ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்நகராட்சியின் மொத்த பரப்பளவு 30.67 சதுர கிலோ மீட்டர் ஆகும். 20 ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 88,430 மக்கள் தொகை கொண்ட நகராட்சியாகும்.
தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக உதகை நகராட்சி விளங்குகிறது. நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆளுநர் மாளிகை, அரசு தாவரவியல் பூங்கா, அரசு ரோஜா பூங்கா, படகு இல்லம், நீலகிரி பழங்குடியினர் அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன,
நகராட்சி எல்லையின் சுற்றுலா வட்டாரத்தில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரம் மிகவும் பிரசித்தி பெற்ற மலை சிகரமாகும். கோடைவிழா காலங்களில் உதகை என அழைக்கப்படும் உதகைக்கு 50,000 முதல் 80,000 வரையிலும் இதர நாட்களில் 10,000 முதல் 50,000 வரையிலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும், தமிழ்நாட்டிற்கு அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் இந்நகருக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை இந்தியாவின் மிகப் பழமையான ரயில் இயக்கப்படுகிறது. உதகை நகரில் முக்கிய தொழிலாக சுற்றுலா, தேயிலை, இங்கிலீஸ் காய்கறிகள் விவசாயம் ஆகியவை இருந்து வருகிறது.
உதகை நகரில் பிரிட்டிசாரால் தொடங்கப்பட்ட 125 ஆண்டுகள் பழமையான நகராட்சி ஆகும். நகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்து, உதகை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அரசு மேம்பாட்டுத்திட்டங்கள் ஒதுக்கீடு கிடைக்கப்பெறும்.
இந்நிலையில், இது தொடர்பாக அரசுக்கு நகராட்சி மூலம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, நகர்மன்றத்தின் ஒப்புதல் பெற இன்று (திங்கள்கிழமை) நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமையில் அவசரக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் உதகை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறியதாவது: உதகை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், உதகை நகராட்சி உடன் இணைக்கப்படும் அனைத்து கிராம ஊராட்சிகும் தேவையான அடிப்படை மேம்பாடு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வாழ்வாதாரம் மேம்படும்.
உதகை நகரின் முக்கிய தொழிலான சுற்றுலா, மாநகராட்சியாக தரம் உயர்த்த நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம், விவசாயம், தேயிலை உற்பத்தி ஆகிய தொழில்கள் மேலும் வளர்ச்சி அடைந்து இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உருவாகும்.
விசாலமான சாலைகள், பார்க்கிங் வசதிகள் போன்றவைகள் மாநகராட்சி தரத்துடன் நடைபாதைகள், வாகன பார்க்கிங் வசதிகள் கிடைக்கும். இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT