Published : 09 Jun 2024 07:00 PM
Last Updated : 09 Jun 2024 07:00 PM
சென்னை: அரசுப் பணிக்கான குரூப் 4 தேர்வு இன்று (ஜூன் 9) நடைபெற்றது. வினாத்தாளில் தமிழ் பகுதி தவிர்த்து இதர கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் 7,247 மையங்களில் இன்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.
இந்த தேர்வெழுத மொத்தம் 20 லட்சத்து 36,774 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் சுமார் 78 சதவீதம் தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 15.88 லட்சம் பேர் வரை தேர்வில் பங்கேற்றனர். மேலும், 4.48 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. சென்னையில் 432 மையங்களில் நடத்தப்பட்ட குருப் 4 தேர்வை ஒரு லட்சம் பேர் வரை எழுதினர்.
இதற்கிடையே தேர்வு காலை 9.30 மணிக்கு துவங்கினால் கூட, தேர்வர்கள் சரியாக 9 மணிக்கு மையத்துக்குள் வந்து விட வேண்டுமென டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியிருந்தது. இந்த விதிமுறையால் காஞ்சிபுரம், கடலூர் உட்பட சில மாவட்டங்களில் சில நிமிடங்கள் தாமதமாக வந்த சில தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் தங்களின் பல மாத உழைப்பு வீணாகிவிட்டதாக தேர்வர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இதுதவிர குரூப் 4 தேர்வில் தமிழ் பிரிவு மட்டும் சற்று கடினமாக இருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாக தேர்வர்கள் சிலர் கூறும்போது, “வினாத்தாளில் தமிழ் பகுதி தவிர்த்து மற்ற பொது அறிவு, கணிதம் போன்ற பிரிவுகளில் கேள்விகள் எளிதாகவே இருந்தன.
அதேநேரம் வழக்கமாக எளிமையாக இருக்கும் தமிழ் பகுதியில் இந்த முறை 10 வினாக்கள் வரை பள்ளிக்கல்வி பாடப் புத்தகங்களுக்கு வெளியே இருந்து கேட்கப்பட்டதால் பதிலளிக்க சிரமமாக அமைந்தது. அதேபோல் தமிழ் பகுதி கேள்விகள் சற்று விரிவாக கேட்கப்பட்டதால், அதை படித்து விடை எழுத அதிக நேரம் தேவைப்பட்டது. இதனால் பலருக்கு 3 மணி நேரம் போதுமானதாக அமையவில்லை” என்றனர்.
இதற்கிடையே குருப்-4 தேர்வை பொருத்தவரை, நேர்முகத் தேர்வு கிடையாது. எனவே, எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு பணி வாய்ப்பு உறுதி. அதன்படி தேர்வு முடிவுகள் ஜனவரியில் வெளியிடப்பட உள்ளன. மேலும், தற்போது 6,244 ஆக அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்கள் எண்ணிக்கையானது 10 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிக்கப்பட இருப்பதாகவும் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT