Last Updated : 09 Jun, 2024 06:56 PM

1  

Published : 09 Jun 2024 06:56 PM
Last Updated : 09 Jun 2024 06:56 PM

“நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப் போராட்டம் தொடரும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொள்ளாச்சி  அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள்  பிரிவு  கட்டண அறையை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்து பார்வையிட்டார்.  

பொள்ளாச்சி: “நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து விதமான சட்டப் போராட்டத்தையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்” என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுவதற்கு ரூ. 72 லட்சம் செலவில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் ஈஸ்வரசாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் தலைமையில் இன்று நடந்தது.

இதில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதிதாக அமைக்கப்பட்ட உள்நோயாளிகள் பிரிவு கட்டண அறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது: “தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி இந்த அரசு பல்வேறு புதிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மக்களைத் தேடி, மருத்துவம் என்ற மகத்தான திட்டம் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. மக்களை வீடுகளுக்கு தேடிச்சென்று 500 வகையான நோய் பாதிப்புகளுக்கு மருத்துவம் பார்க்கிறோம்.

இன்றைக்கு பல்வேறு நாடுகளில் இருப்பவர்களும் கூட எப்படி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற விவரங்களை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் கேட்கிற நிலை இருந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மகத்தான திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு, மக்களுக்கு மிகப்பெரிய அளவிலான மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காப்போம் 48 உள்ளிட்ட திட்டங்கள் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. இன்னுயிர் காப்போம் திட்டம் 694 மருத்துவமனைகளில் செயல்பாட்டில் உள்ளது. அதேபோல் இதயம் காப்போம் என்கிற திட்டம் கோவை மாவட்டத்தில் 2023 ஜூன் 27ம் தேதி மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டியில் தொடங்கப்பட்டது. தற்போது பொள்ளாச்சியில் முதன் முறையாக தொடங்கப்பட்ட இந்த கட்டண சிகிச்சை அறை திட்டம் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் போய் சேர வேண்டும்.

ஆகவே ஒரு அறைக்கு கட்டணம் ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பொள்ளாச்சியில் இரண்டு நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என்று 4 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கிற பணியிடங்களை எம்ஆர்பி மூலம் நேர்மையான முறையில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே 977 செவிலியர்களை பணி நியமனம் செய்திருக்கிறோம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால், கடந்த பத்து ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்திருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் 923 மருந்தாளுனர் பணியிடங்கள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு காலி பணியிடம் கூட இல்லாத நிலையை விரைவில் உருவாக்க இருக்கிறோம்” என்று அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘தமிழக முதல்வரின் அறிவுறுத்தலோடு ஒரு புதிய முயற்சியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் முதன்முறையாக உள்நோயாளிகள் பிரிவு 13 கட்டண அறைகள் திறப்பு விழா பொள்ளாச்சியில் நடைபெற்றிருக்கிறது.

கடந்த ஓராண்டுக்கு முன்னால் 2018 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 24 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் இருக்கிற 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கட்டண அறைகள் என்பது எங்கேயும் இல்லை.

ஏற்கெனவே இந்த அரசு அமைந்ததற்கு பிறகு மதுரை ராஜாஜி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் மோகன்குமார் மங்கலம் கல்லூரி மருத்துவமனை போன்ற பல்வேறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பே வார்டு என்று சொல்லக்கூடிய கட்டண அறைகளை திறந்து வைத்திருக்கிறோம். இந்த கட்டண அறைகளை பொருத்தவரை மிகக் குறைந்த கட்டணமாக ஆயிரம் ரூபாய் என்று அறிவித்து, ஒரு அதி தீவிர சிகிச்சை பிரிவுக்குள் இருக்கும் அனைத்து வசதிகளுடன் கூடிய அறையாக செயல்படும்.

நாய்க்கடி, பாம்புக்கடி என்றால், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வட்டார அரசு தலைமை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குதான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது நாய்க்கடிக்கான ஏ.ஆர்.பி. எனும் மருந்தும், பாம்புக்கடிக்கான ஏ.எஸ்.வி. எனும் மருந்தும் தமிழகத்திலுள்ள 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்துள்ளோம். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

நீட் தேர்வில் நடக்கும் குளறுபடிகளால் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கூட அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு உரிய வாய்ப்பு மறுக்கப்படுமோ என்கின்ற ஒரு பயம் இருக்கிறது.’ என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x