Published : 09 Jun 2024 03:36 PM
Last Updated : 09 Jun 2024 03:36 PM
சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 9) வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை (ஜூன் 10) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று (ஜூன் 9) முதல் 13.06.2024 வரையிலான ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஜூன் 9 முதல் ஜூன் 13 ஆம் தேதி வரை, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜூன் 9 முதல் ஜூன் 13 வரை, கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT