Published : 09 Jun 2024 12:23 PM
Last Updated : 09 Jun 2024 12:23 PM

“அரசுப் பேருந்துகளின் அவல நிலைக்கு தமிழக அரசு தான் காரணம்” - ராமதாஸ்

கொள்ளிடம் அருகே முன் சக்கரம் கழன்ற நிலையில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து | கோப்புப்படம்

சென்னை: “அரசுப் பேருந்துகளின் இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தான் காரணம். பழுதடைந்த பேருந்துகளை சரி செய்யவும், அதற்கு தேவையான உதிரி பாகங்களை வாங்கவும் போக்குவரத்துக் கழகங்களில் நிதி இல்லை. அதனால் கிட்டத்தட்ட 25% பேருந்துகள் இயக்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூரில் நேற்று ஒரே நாளில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான இரு நகரப் பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளன. ஓட்டுனர்கள் சிறப்பாக செயல்பட்டதால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அந்த அரசுப் பேருந்துகளை நம்பி பயணம் செய்த மக்கள், வேறு ஊர்திகளில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைய வேண்டிய அவல நிலைக்கு ஆளானார்கள். அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதும், அதை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக அரசுப் பேருந்துகள் பழுதடைந்து நிற்பதும், விபத்துக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகின்றன. சென்னையில் பேருந்தில் ஓட்டை ஏற்பட்டு பயணி சாலையில் விழுந்து காயமடைந்தது, திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டது, மயிலாடுதுறை உள்ளிட்ட பல இடங்களில் பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூரை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகள் வாடிக்கையாகி விட்டன. அவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் ஒரே நாளில், ஒரே ஊரில் இரு நகர பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட முடியாத அளவுக்கு முற்றிலுமாக முடங்கி விட்டன என்று தான் பொருள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.இவை தவிர 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாவது குறித்து பாமக தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்த நிலையில், அரசு பேருந்துகளில் இருந்து 17,459 பழுதுகள் கண்டறியப்பட்டதாகவும், அனைத்து பேருந்துகளிலும் ஏற்பட்ட பழுதுகள் மே 6-ஆம் தேதிக்குள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்திருந்தன. ஆனால், ஒரு பேருந்து கூட முழுமையாக பழுது நீக்கப்படவில்லை என்பது தான் உண்மை என்பது தஞ்சாவூரில் பேருந்துகளின் அச்சு முறிந்ததன் மூலம் உறுதியாகியுள்ளது.

அரசுப் பேருந்துகளின் இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தான் காரணம். பழுதடைந்த பேருந்துகளை சரி செய்யவும், அதற்கு தேவையான உதிரி பாகங்களை வாங்கவும் போக்குவரத்துக் கழகங்களில் நிதி இல்லை. அதனால் கிட்டத்தட்ட 25% பேருந்துகள் இயக்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இன்னும் சில பணிமனைகளில் மேலாளர்களே தங்களின் சொந்த செலவில் உதிரி பாகங்களை வாங்கி பழுது நீக்க வேண்டியிருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. அரசுப் பேருந்துகளை பழுது நீக்குவது போக்குவரத்துக் கழகங்களின் அடிப்படைக் கடமை. ஆனால், அதைக் கூட செய்ய முடியாத அவல நிலைக்கு போக்குவரத்துக் கழகங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஆயிரக்கணக்கில் புதிய பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், கடந்த மூன்றாண்டுகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 7,682 புதிய பேருந்துகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் 1,000 மின்சார பேருந்துகள் என மொத்தம் 8,682 புதிய பேருந்துகள் வாங்கப்படும்; ஒவ்வொரு மாதமும் 300-க்கும் அதிகமான புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த மாதம் 22-ஆம் நாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். ஆனால், அதன்பின் 20 நாட்களாகும் நிலையில் ஒரு புதிய பேருந்து கூட பயன்பாட்டுக்கு வரவில்லை.

அரசுப் பேருந்துகளின் சேவை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தவை. மாநிலத்தின் பொருளாதாரமும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலையும் முன்னேற வேண்டும் என்றால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வலிமையாக இருக்க வேண்டியதும், அனைத்துக் கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டியதும் கட்டாயம் ஆகும்.

இதை உணர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x