Published : 13 May 2018 09:46 AM
Last Updated : 13 May 2018 09:46 AM

ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது: ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு கடும் கட்டுப்பாடு; உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க சுற்றுப்பயணம் செல்வாரா?

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் யாரும் பத்திரிகை, ஊடகங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கக் கூடாது என்று கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த ரஜினி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். பின்னர் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். ‘காலா’ படத் தின் பாடல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, தனது போயஸ் தோட்டம் இல்லத்தில் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்த ரஜினி, வாக்குச்சாவடி வாரியாக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இந்தப் பணி 75 சதவீதம் முடிந்தால்தான் கட்சிப் பெயரையும் கொடியையும் அறிவித்து கொள்கையை பிரகடனப்படுத்து வேன் என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் மூலம் பல முக் கிய தகவல்கள் கசிந்தன. இது ரஜினியின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. இதையடுத்து, மன்ற நிர்வாகிகள் யாரும் பத்திரிகைகளுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கக் கூடாது என்று கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொலைபேசி மூலம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததுடன், சுற்றறிக்கையும் அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், உறுப்பினர் சேர்க் கைப் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டிருப்பது குறித்து மன்ற நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறிய தாவது: திமுக, அதிமுக போன்ற வலு வான கட்டமைப்பைக் கொண்டுள்ள கட்சிகள்கூட, தொடக்கத்தில் ஏராளமான உறுப்பினர்களைச் சேர்த்த பிறகுதான் கட்சி தொடங்குவது என்ற நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அவர்கள் கட்சி தொடங்கி, மக்களைச் சந்தித்து தங்கள் கொள்கை, கோட்பாடுகள், எதிர்காலத் திட்டங்களை எடுத்துக்கூறியும், மக்க ளின் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு கண்டும், மக்கள் மத்தில் நல்ல அபிமானத்தை ஏற்படுத்தியும்தான் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்தனர்.

அப்படி இருக்க, வெறுமனே நாங்கள் போய் ‘எங்கள் மன்றத்தில் உறுப்பினராகச் சேருங்கள்’ என்று கேட்கும்போது, ‘உங்கள் கட்சிப் பெயர் என்ன, உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன அதை முத லில் சொல்லுங்கள் என்கிறார்கள். ‘எங் கள் தலைவர் உங்களுக்கு எல்லாம் செய்வார்’ என்று நாங்கள் சொன்னால் கூட அவர்களுக்கு முழு நம்பிக்கை வரவில்லை. தவிர, தொடர் செலவினங்களால் எங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சொந்தப் பணத்தைக் கொண்டு எவ்வளவு நாட்கள்தான் நாங்களும் சமாளிக்க முடியும். இதை தலைமை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

ரசிகர்களாக இருந்தவர்கள்தான் தற் போது மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆகியுள்ளனர். அவர்களுக்கு அரசியல் அனுபவம் இல்லாததால், கீழே உள்ள அமைப்பினரை வழி நடத்த முடியாமல் திணறுகின்றனர். கீழே உள்ள அமைப்பினர் ஒத்துழைப்பதில்லை என்ற மாவட்ட நிர்வாகிகள் குறைபடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்தால் போதும். இந்த எல்லா குறைகளும் நீங்கி, உறுப்பினர் சேர்க்கையும் சூடுபிடிக்கும் என ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் எதிர்பார்ப்ப தாக தகவல் அறிந்தவர்கள் கூறு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x