Published : 08 Jun 2024 10:54 PM
Last Updated : 08 Jun 2024 10:54 PM

சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி ஜூலைக்குள் முடிக்கப்படும்: தலைமை செயலர்

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை அதிகாரிகளுடன் இணைந்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு.

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால்களில் ஜூலை மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரயில்வே சார்பில் ரூ.5.50 கோடியில் காந்தி இர்வின் பால சாலை அருகில் 386 மீட்டர் நீளத்தில் ரயில் பாதையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.59.42 கோடியில் 3065 மீட்டர் நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாம்பலம் கால்வாய் சீரமைப்பு பணி மற்றும் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணி போன்றவற்றை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வழக்கமாக சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் முதல் அதிக மழை பெய்யும். சில நேரங்களில் தென்மேற்கு பருவமழை காலத்திலும் அதிக மழை பொழிகிறது. குறுகிய காலத்தில் 6 செ.மீ.க்கு மேல் மழை பெய்துவிடுகிறது. இதனால் சில இடங்களில் நீர் தேங்கி அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெற கூடாது என்பதற்காக, பருவமழை எதிர்கொள்ள நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கில் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் 5200 கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் 1300 கி.மீ நீள மழைநீர் வடிகால்கள் சிறப்பாக உள்ளன. மீதம் உள்ளவற்றில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இதுவைரை 3500 கி.மீ நீளத்துக்கு தூர்வாரப்பட்டுள்ளது. இதர வடிகால்களில் தூர்வாரப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகாலை ஒட்டி, 90 ஆயிரம் வண்டல் வடிகட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 37 ஆயிரம் தொட்டிகளில் தூர்வாரப்பட்டுள்ளன. மீதம் உள்ள தொட்டிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலை துறை வசம் 450 கி.மீ நீள சாலைகள் உள்ளன. அவற்றில் உள்ள மழைநீர் வடிகால்களிலும் தூர்வாரப்பட்டு வருகிறது. அனைத்து தூர்வாரும் பணிகளும் ஜூலை மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க, காந்தி இர்வின் பாலம் சாலை அருகே ரயில் பாதை கடப்பதால், அங்கு மழைநீர் வடிகால் அமைப்பதில் சிக்கல் இருந்தது. தற்போது வடிகாலை கூவம் ஆற்றோடு இணைக்கும் பணியை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் முடிந்தால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கம் இருக்காது.

தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் 2 அடுக்கு பறக்கும் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்டி பணியை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளால் மழைநீர் செல்வது பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 50 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்யும் போது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக தனி மேலாண்மை திட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன், தலைமை பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x