Published : 08 Jun 2024 12:08 PM
Last Updated : 08 Jun 2024 12:08 PM
சேலம்: “ஒரு கட்சி தோல்வி அடைந்தால், மீண்டும் தோல்வி அடையும் என்பதில்லை. திட்டமிட்டு பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனர். சசிகலா, ஓபிஎஸ் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்து கட்சியை வழி நடத்தலாம் என்பது முடிந்து போன கதை. அவர்கள் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து ஊடகங்களில் விவாதம் நடத்துகிறார்கள், எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த தேர்தலில் பிரதமர் மோடி அதிக முறை பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்து சென்றார். பாஜக முக்கிய தலைவர்களும் தேசிய தலைவர் நட்டாவும் பலமுறை தமிழகம் வந்து சென்றார். அமித் ஷாவும் வந்து பிரச்சாரம் செய்தார். பல மத்திய அமைச்சர்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். அதேபோல, திமுகவை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். ராகுல் காந்தியும் பிரச்சாரம் செய்தார். ஆனால், அதிமுகவில் நான் ஒருவன் தான் பிரச்சாரம் செய்தேன், கூட்டணியிலிருந்து தேமுதிக பிரேமலதா மற்றும் கூட்டணி கட்சியினர் அங்காங்கே பிரச்சாரம் செய்தனர்.
மேலும், பாஜக, இண்டியா கூட்டணிக்கு பலம் அதிகம். அதிமுக கூட்டணிக்கு பலம் இல்லை என பத்திரிகைகள் ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வந்தது. இவ்வளவுக்கும் இடையில் அதிமுக தேர்தலை சந்தித்து, கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடும்போது தற்போது ஒரு சதவீதம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. இது அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாகவும், அதனால் தான் பாஜக கூட்டணி அதிக வாக்குகள் பெற்றதாகவும் தவறான செய்திகள் வருகின்றன. திமுக 2019-ம் ஆண்டு தேர்தலில் 33.52 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்தத் தேர்தலில் 26.93 சதவீதம் வாக்குகளே பெற்று, திமுக-வின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது. அதிமுக தான் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதேபோல, பாஜக-வும் குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது.
அந்தந்த தேர்தலில் சூழ்நிலைக்குத் தக்கவாறு வெற்றி தோல்விகள் அமையும். ஒரு கட்சி தோல்வி அடைந்தால், மீண்டும் தோல்வி அடையும் என்பதில்லை. திட்டமிட்டு பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனர். சசிகலா, ஓபிஎஸ் பிரிந்து சென்றது முடிந்து போன கதை. அவர்கள் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். அவர்களெல்லாம் பிரிந்து சென்றதால், ஒரு சில இடங்களில் அதிமுகவுக்கு கூடுதலாக வாக்குகள் கிடைத்துள்ளது. தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளனர். எந்த சமயத்தில் எப்படி வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து வாக்களிக்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
கோவையில் அண்ணாமலை குறைவான வாக்குகள் தான் வாங்கி உள்ளார். ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும், சட்டமன்றத் தேர்தல் என்றாலும் வாக்கு வித்தியாசம் மாறி மாறி வரும். சூழ்நிலைக்கு தக்கவாறு மக்கள் வாக்களிக்கிறார்கள். நான் முதல்வரான போது, மூன்று, நான்கு மாதங்கள் பதவியில் இருப்பாரா என்றார்கள், நான்காண்டு இரண்டு மாதம் சிறப்பான ஆட்சி தந்தோம். பிறகு, கட்சி இரண்டாகும் என அவதூறு பிரச்சாரம் செய்தனர்.
அதிமுக, தலைவர் காலத்திலும் சரி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலும் சரி, தொடர்ந்து தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து வந்தோம். நம்மை வெற்றி வரும்வரை பயன்படுத்தி கொள்கிறார்கள். வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தை மறந்து விடுகிறார்கள். இந்நிலை மாற வேண்டும் என்பதால் தான் தனித்துப் போட்டியிட்டோம். ஆட்சி அதிகாரம் வேண்டுமென்றால் தேசிய கட்சியுடன் நாங்கள் சேர்ந்து இருப்போம். தமிழ்நாட்டு உரிமையை காக்க வேண்டும், தமிழக உரிமைகள் பறிபோகும் போது தடுக்கவும், மக்களவை தேர்தலில் சுதந்திரமாக செயல்படவும், அதிமுக இந்த முடிவை எடுத்தது. இப்போது வெற்றி பெற்ற திமுக கூட்டணியினர் என்ன சாதிப்பார்கள் என பார்க்கத்தானே போகிறோம்.
அதிமுகவில் பிளவு இல்லை. அதிமுகவை பற்றி பேச அண்ணாமலைக்கும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை. ரகுபதிக்கு அடையாளம் கொடுத்தது அதிமுகதான். அதன்பின்பு அவர் திமுக சென்றார்.” என்று தெரிவித்துள்ளார்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT