Published : 08 Jun 2024 11:23 AM
Last Updated : 08 Jun 2024 11:23 AM

தொழிலதிபர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஊடக நிறுவனரும், தொழிலதிபருமான ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவ் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஊடகம், இதழியல், திரைப்படத் துறைகளுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்புகள் வழியே என்றென்றும் நிலைத்திருக்கும் மரபை அவர் விட்டுச்சென்றுள்ளார். இத்துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது அன்புகொண்டோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராமோஜி ராவ் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவர் உடல் நிலை மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 4.50 மணியளவில் உயிரிழந்தார். இதனை ஈ நாடு ஊடக குழுமம் உறுதி செய்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியை நிறுவியவரும் இவர்தான். இந்த தளத்தில் பாகுபலி, புஷ்பா உள்பட பல்வேறு பிரபல திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமோஜி ராவ் மறைவுக்கு திரை, அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். அதேபோல், தெலங்கானா பாஜக தலைவரும் எம்.பி.யுமான ஜி கிஷன் ரெட்டி ராமோஜி மறைவுக்கு வருத்தம் தெரிவித்து சமூகவலைதளத்தில் இரங்கல் குறிப்பை பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x