Published : 08 Jun 2024 11:14 AM
Last Updated : 08 Jun 2024 11:14 AM
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அதிமுக தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில், இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஒட்டிய சுவரொட்டியால் தாம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக அதிமுக தமாகா, நாம் தமிழர் உள்ளிட்ட 31 பேர் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 4,87,029 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் அதிமுகவை தவிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தாம்பரத்தில் வெற்றி பெற்ற திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியில் 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவித்து அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக சார்பிலும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
அந்த சுவரொட்டியில் இரட்டை இலைக்கு வாக்களித்த வாக்காளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், என்றும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும். 2026 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மக்கள் போற்றும் நல்லாட்சி அமைய அயராது உழைப்போம் என குறிப்பிட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதிமுக திமுகவினர் இருவரும் மாறி மாறி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் தாம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுவரொட்டி குறித்து அதிமுகவினர் கூறியது: இந்த தேர்தலில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால், எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் என்றனர்.
திமுகவினர் கூறியது: திமுக அரசு பொறுப்பு ஏற்றத்திலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நாங்கள் செய்திருக்கிறோம். குறிப்பாக மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை திட்டம், நம்மை காக்கும் 48, மாணவர்களுக்காக நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் நாங்கள் வெற்றி பெற்றோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT