Published : 07 Jun 2024 06:39 PM
Last Updated : 07 Jun 2024 06:39 PM

சசிகலாவின் கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய அனுமதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

சசிகலா | கோப்புப்படம்

சென்னை: வி.கே.சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு மேற்கொள்ள கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் அனுமதியின்றி கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதால் அதற்கு உரிய வரி செலுத்த வேண்டும் என்றும், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வலியுறுத்தியும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தின் அப்போதைய தலைவரான பொன் தோஸ் கடந்த 2007-ம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பித்திருந்தார்.

இதை எதிர்த்து கோடநாடு எஸ்டேட் மேலாளரான ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட்டில் எந்த விதிமீறலும் இல்லை எனக்கூறி கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்து கடந்த 2008-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பொன் தோஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “சொத்து வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மட்டுமே கோடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி கேட்கப்படுகிறது.

கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து அந்த எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை இருக்கிறது. சட்டவிரோதமாக கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தால் என்ன செய்வது என்று, ஆய்வு செய்தால் மட்டுமே உண்மையான களநிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும்,” என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், கடந்த 2023-ம் ஆண்டு வரை சொத்து வரி முறையாக செலுத்தப்பட்டுள்ளது, எனக்கூறி அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், அந்த எஸ்டேட்டுக்குள் விதிகளை மீறி எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தனி நீதிபதி தனது உத்தரவிலேயே குறிப்பிட்டுள்ளார் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “தற்போதைய நிலவரம் என்ன என்பதை ஆய்வு செய்தால் தானே விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பது தெரியும். அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?” என்றனர். அதற்கு மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஆய்வு என்ற பெயரில் பங்களாவுக்குள் நுழைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,” என்றார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கோடநாடு எஸ்டேட்டை முழுமையாக ஆய்வு செய்யவும், சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளது. உரிய விதிமுறைகளைப் பின்பற்றி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ளலாம்” என அனுமதியளித்து உத்தரவிட்டனர். ஆய்வின் போது அதிகாரிகள் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். அங்கு இருப்பவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x