Published : 07 Jun 2024 04:11 PM
Last Updated : 07 Jun 2024 04:11 PM
சென்னை: “நீட் தேர்வில் ஒட்டுமொத்தமாக 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கான இந்த எண்ணிக்கை நீட் தேர்வு முடிவை நம்பகத்தன்மை இல்லாததாக ஆக்குகிறது. குறிப்பாக, ஹரியாணாவில் ஒரு மையத்தில் எழுதிய 8 பேர் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். இதில் 6 பேர் அடுத்தடுத்த வரிசை எண்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் இந்த ஆண்டு தமிழகத்திலும், விரும்புகிற இதர மாநிலங்களிலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுகள் அதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாநிலங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்கள் அதில் இணைவதற்கும், தங்கள் மாநிலத்தில் தேவையில்லை என்று விலக நினைப்பவர்கள் விலகிக் கொள்வதற்குமான உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
தேர்வு பெறும் பெரும்பாலான மாணவர்கள் பயிற்சி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பது, பயிற்சிக்கு வாய்ப்பில்லாத மாணவர்களை சமமற்ற போட்டியில் தள்ளுவதாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வலியுறுத்தி வந்தது. இத்தகைய கொள்கை ரீதியான பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் முறைகேடுகள் குறித்த ஏராளமான புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக வினாத்தாள் வெளியானதாகவும் அதையொட்டி 13 பேர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியான பின்பு எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதற்கான வாய்ப்புகளை வெளிப்படுத்துகின்றன. இந்தியாவில் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்று நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? சுமார் 1 லட்சம் மருத்துவ இடங்களுக்கு 13.16 லட்சம் பேரை தகுதி உள்ளவர்களாக அறிவித்ததன் நோக்கம் என்ன? பொதுப்பிரிவுக்கு 164 மதிப்பெண்கள் அதாவது, 22.77 சதவிகிதத்தை தகுதி மதிப்பெண்ணாக வைத்தது ஏன்?
ஒட்டுமொத்தமாக 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். முன்னெப்போது இல்லாத அளவுக்கான இந்த எண்ணிக்கை நீட் தேர்வு முடிவை நம்பகத்தன்மை இல்லாததாக ஆக்குகிறது. குறிப்பாக, ஹரியானாவில் ஒரு மையத்தில் எழுதிய 8 பேர் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். இதில் 6 பேர் அடுத்தடுத்த வரிசை எண்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என்பதும், தவறான பதிலுக்கு 4 மதிப்பெண் குறைவதோடு கூடுதலாக ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் என்கிற நிலையில் இரண்டாம், மூன்றாம் இடம் பெற்றவர்கள் 719, 718 என மதிப்பெண் பெற்றிருப்பது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. இழக்கப்பட்ட நேரத்துக்கான கருணை மதிப்பெண்கள் இது என தேசிய தேர்வு முகமை சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியானதாக இல்லை.
நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் மீது தொடர்ச்சியாக வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் இந்நிறுவனம் நீட் தேர்வை நடத்துவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்தப் பின்னணியில் இந்த ஆண்டு தமிழகத்திலும், விரும்புகிற இதர மாநிலங்களிலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும்.
எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீட் தேர்வை தேர்ந்தெடுக்கும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்கிற தனது தொடர்ச்சியான நிலைபாட்டை வலியுறுத்துகிறது. இதை ஒரு சூதாட்டம் போல 22 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தவர்கள் கூட சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் போன்ற தளர்வுகள் கல்வியின் தரத்தை பாதிக்கக் கூடியவை, ஏழை, எளிய மாணவர்களுக்கான வாய்ப்பை மறுக்கக் கூடியவை. மாநில நிலைமைக்கு ஏற்றார்போல் திட்டமிடுவதை தடுக்கும் கூட்டாட்சிக்கு எதிரான தன்மை கொண்டவை என்கிற காரணத்தினால் இப்போதுள்ள நீட் தேர்வு முறையை கைவிட வேண்டும்.
மாநில அரசுகளே மாணவர் சேர்க்கைக்காக வழிமுறைகளை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் குறித்து முறையான விசாரணை செய்து தவறிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும். இந்த குளறுபடிகளால் மாணவர்கள் பாதிக்கப்படா வண்ணம் தவறுகள் சரி செய்யப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT