Published : 07 Jun 2024 11:00 AM
Last Updated : 07 Jun 2024 11:00 AM
உதகை: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பந்தலூரில் 98 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்தது. காலை முதல் உதகை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கன மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, கிரீன்பீல்டு மற்றும் லோயர் பஜார் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மார்க்கெட் பகுதிகளில் மழை நீர் புகுந்த நிலையில், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.உதகை கமர்ஷியல் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை ரயில் நிலைய பாலம் மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற தண்ணீர் இறங்கும் வரை காத்திருந்து சென்றன.
மேலும் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் ஆகிய பகுதிகளிலும் தேங்கி நின்ற மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்தவாறு சென்றன. சேரிங்கிராஸ் பகுதியில் வணிக வளாகங்களின் முன்பகுதியில் நீர் புகுந்தது. இதனால் அங்கு வாகனங்களை நிறுத்தி வைத்திருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
உதகை ரயில்வே காவல் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்து காவல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் காவல் நிலையத்திலிருந்து போலீஸார் வெளியே வந்து விட்டனர். காவல் நிலையத்தில் தண்ணீர் முழுமையாக வடிய ஒரு நாள் ஆகும். மேலும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால், போலீஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசியது. பல ஆண்டுகளாக கன மழை பெய்தால் காவல் நிலையத்தை வெள்ளம் செல்வது வாடிக்கையாக உள்ளது. எனவே காவல் நிலையத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாட்னா ஹவுஸ் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.உதகையில் நேற்று 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 80 சதவீதமாக இருந்தது. இன்று காலை எட்டு மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பந்தலூரில் 98 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தில் மழை அளவு (மி.மீ.,) உதகையில் 52.4, நடுவட்டத்தில் 13, குந்தாவில் 23, அவலாஞ்சியில் 34, எமரால்டில் 21 கெத்தையில் 16, கிண்ணக்கொரையில் 45, அப்பர் பவானியில் 35, குன்னூரில் 22, பர்லியாரில் 21, கோத்தகிரியில் 15, கீழ்கோத்தரியில் 36, கூடலூரில் 26, தேவாலாவில் 44, ஓ வேலியில் 23 எனப் பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT