Published : 07 Jun 2024 09:16 AM
Last Updated : 07 Jun 2024 09:16 AM
திருச்சி: குவைத் நாட்டில் உயிரிழந்த திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த பழனிசாமி (39) என்ற இளைஞரின் உடலைக் கொண்டு வருவதற்கு திருச்சி எம்.பி. துரை வைகோ உதவி செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி நகராட்சி பாரதிதாசன் தெருவில் வசித்து வரும் மதிமுகவைச் சேர்ந்த ரமீலாவின் கணவர் பழனிச்சாமி என்பவர் குவைத் நாட்டில் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவர், ஜூன் 5-ம் தேதி தான் தங்கியிருந்த இடத்தில் இறந்ததாக நேற்று காலை ரமீலாவுக்கு தகவல் வந்தது.
இதுகுறித்து துவாக்குடி நகரச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான மோகன், மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கத்துக்கு தகவல் அளித்தார்.
சென்னை மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இருந்த தமிழ் மாணிக்கம், இது தொடர்பாக மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோவிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவர் ரமீலாவை தொடர்பு கொண்டு அவரது கணவர் பழனிச்சாமி மறைவுக்காக வருத்தம் தெரிவித்தார். அவரது கணவர் உடலை திருச்சிக்குக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், சென்னை துணை தூதரக அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு துரை வைகோ பேசினார்.
பின்னர், மறைந்த பழனிச்சாமி பணியாற்றிய நிறுவனத்தின் முகவரி, தொடர்பு எண், அவருடன் பணியாற்றிடும் நண்பரின் எண் ஆகியவற்றை குடும்பத்தினரிடம் பெற்று, மதிமுக இணையதள பொறுப்பாளர் மினர்வா ராஜேஷிடம் அளித்து, உடலை திருச்சிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
உயிரிழந்த பழனிச்சாமியின் நண்பர் குவைத்தில் உள்ள மதி தேவையான சான்றுகள் பெற்று நாளை இரவுக்குள் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த விவரம் பழனிச்சாமி குடும்பதினரிடமும் தெரிவிக்கப்பட்டது. துரை வைகோ எம்.பியின் இந்த மனிதநேய பணிக்கு ரமீலா மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT