Published : 07 Jun 2024 07:23 AM
Last Updated : 07 Jun 2024 07:23 AM

மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி எதிரொலி: மீண்டும் ஒலிக்க தொடங்கிய ஒன்றிணைப்பு குரல்

சென்னை: ஒன்றுபட்ட அதிமுக, 2014 மக்களவைத் தேர்தலில் தனித்து நின்று 37 இடங்களில் வென்று தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றது.அந்த தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு, 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 வாக்குகளை (44.34 சதவீதம்) பெற்றது.

தினகரன் அணி பிரிந்த நிலையில், அதிமுக 2019 மக்களவை தேர்தலை எதிர்கொண்டு 1 இடத்தில் வென்றது. இப்போது, அதிமுக பழனிசாமி தலைமையிலும், ஓபிஎஸ் அணி, தினகரன் அணி, சசிகலா அணி என 4 அணிகளாக பிரிந்து நின்ற நிலையில் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டனர்.

இத்தேர்தலில் அதிமுகவும், கூட்டணி கட்சிகளும் ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. 34 இடங்களில் போட்டியிட்டு 88 லட்சத்து 40 ஆயிரத்து 413 வாக்குகளை (20.46 சதவீதம்) பெற்றது.

அதிமுக 7 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியினர் 2 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தனர். அதிமுக போட்டியிட்ட 34 தொகுதிகளில், 24 தொகுதிகளில் 2-ம் இடம், 9 தொகுதிகளில் 3-ம் இடம், ஒரு தொகுதியில் 4-ம் இடம்பிடித்தது. ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகளுக்கும் குறைவாக பெற்றுள்ளது. ஒருவேளை ஒன்றுபட்ட அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், இத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம்,நாமக்கல், திருப்பூர், கோவை, கடலூர், சிதம்பரம், விருதுநகர், தென்காசி ஆகிய 13 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பறிபோயிருக்கும்.

ஒருபுறம், அதிமுகவை பழனிசாமியிடம் இருந்து மீட்க அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை தொடங்கி பன்னீர்செல்வம் தர்மயுத்தம் 2.0 நடத்தினார். மற்றொருபுறம் அதிமுகவை மீட்பதே லட்சியம் என தினகரன் செயல்பட்டு வந்தார். அதிமுக இணைப்புக்கான காலம் கனிந்துவிட்டது, பொறுமையாக இருங்கள் என சசிகலா கூறிவந்தார். தினகரனை நேரில் சந்தித்தும் பன்னீர்செல்வம் இணைப்பு முயற்சி மேற்கொண்டார். சசிகலாவையும் சந்திக்க இருந்தார். தற்போது அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், மீண்டும் அதிமுக ஒன்றிணைப்பு குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக 7 இடங்களில்டெபாசிட் இழந்திருப்பது மிகப்பெரிய வேதனை, சகித்துக்கொள்ளவே முடியவில்லை. இதுபோன்ற தொடர் தோல்விகளை கட்சி எப்போதும் கண்டதில்லை. ஒருசிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. கட்சியை ஒருங்கிணைக்க அனைவரும் வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரையும், இரட்டை இலை சின்னத்தையும் எதிர்த்து போட்டிட்ட பன்னீர்செல்வத்துக்கு, அதிமுக தொண்டர்களை அழைக்க உரிமை இல்லை. ஜெயலலிதா வீட்டில் பணிக்கு சென்ற சசிகலா, தன்னை நிலைநிறுத்திக் கொண்டு 36 ஆண்டுகள் அதிகாரத்தை சுவைத்தவர். அவர் அழைத்தும் ஒருவரும் செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியமுன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், கட்சியை ஒன்றிணைக்க, எம்ஜிஆர்போல சிக்கல் தீர்ப்பு குழுவை ஏற்படுத்தி தீர்வுகாண வேண்டும் என்றார்.

அதிமுகவில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகிய 3 பேரையும் ஒருபோதும் சேர்க்க மாட்டோம் என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். இந்நிலையில், ஓபிஎஸ், சசிகலாவின் கட்சி ஒன்றிணைப்பு முயற்சிகள் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை வருங்கால நிகழ்வுகள் முடிவு செய்யும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x