Published : 07 Jun 2024 06:20 AM
Last Updated : 07 Jun 2024 06:20 AM

வாக்குப்பதிவு குறைந்த தொகுதிகளில் ஆய்வு: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

சென்னை: மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அடுத்த கட்ட பணிகள் குறித்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது: தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து தொகுதிகளிலும் கல்வி நிறுவனங்களே வாக்கு எண்ணும் மையங்களாக உள்ளன.

தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கிருந்து உடனே அப்புறப்படுத்தி, அருகில் உள்ள பாதுகாப்பு அறைகளில் (ஸ்டிராங் அறை) வைக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

பயன்பாட்டுக்கு பிறகு, மின்னணு இயந்திரங்களை மீண்டும் பாதுகாப்பாக வைக்க தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கெனவே 32 மாவட்டங்களில் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. அதில், மாவட்டங்களுக்குள் அடங்கிய சட்டப்பேரவை தொகுதி வாரியாக இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். மேலும் 6 மாவட்டங்களில் கிடங்குகள் கட்ட ஆணையத்தின் அனுமதி பெற்று, தமிழக அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பாக ஆணையத்துக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை. தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டதால், இனி இதுதொடர்பான புகார்களை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனுவாக மட்டுமே அளிக்க முடியும். அதற்கு 45 நாட்கள் அவகாசம் உள்ளது.

அதற்குள் உயர் நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள் ஏதேனும் மனு அளித்தால், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், அந்த தொகுதிக்கான இயந்திரம் தனியாக வைக்கப்படும். தேமுதிக புகார் தொடர்பாக, தேர்தல் ஆணைய உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில், வேட்பாளர் அல்லது கட்சி சார்பில் புகார் அளித்தால், அதுபற்றி விசாரணை செய்ய வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்பப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால், மீண்டும் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

தேர்தல் காலத்திலும், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருப்பார்கள். பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கு இப்போதும் விண்ணப்பிக்கலாம்.

பொதுவாக, இடம்பெயர்தல் காரணமாகவும் வாக்குப்பதிவு குறைகிறது. வாக்குப்பதிவு குறைந்த தொகுதிகளில் அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் தொகுதி, வாக்குச்சாவடி வாரியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இரட்டை பதிவுகளை சோதனை செய்யும் வசதி தற்போது தொகுதிக்குள் மட்டுமே உள்ளது. இதேபோல, நாடு முழுவதும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் இருக்கிறதா என ஆய்வு செய்வதற்கான நடைமுறை வரவேண்டும். மாநிலத்துக்குள் இந்தநடைமுறை குறித்து சோதனை நடத்தப்பட்டது. இனி இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும்.

வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், உரிய ஆவணங்கள் அடிப்படையில் திரும்ப தரப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் 6 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x