Last Updated : 06 Jun, 2024 05:59 PM

7  

Published : 06 Jun 2024 05:59 PM
Last Updated : 06 Jun 2024 05:59 PM

“அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை” -  அண்ணாமலை திட்டவட்டம்

கோவை: “ஆளுங்கட்சியின் இடர்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். எனக்கு வாக்களித்த கோவை மக்கள் அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளோம்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை வந்த அண்ணாமலை இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என அதிமுக தரப்பில் கூறப்படுவதைப் பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே எதோ பிரச்சினை தொடங்கியுள்ளதாக நான் பார்க்கிறேன். 2019-ல் ஆளுங்கட்சியாக இருந்தபோது கூட அதிமுகவால் மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் தான் வெற்றிபெற முடிந்தது.

அதிமுக தலைவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதையே 2024 தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே எஸ்.பி.வேலுமணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கோவை அதிமுக கோட்டை என்று கூறப்பட்டு வந்த நிலையில் பாஜக 11.5 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். ஆளுங்கட்சியின் இடர்பாடுகள், பணபலம், படை பலம், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இந்த வாக்குகள் எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

எங்கள் கட்சியின் தொண்டர்கள் மொட்டை அடித்தல், விரலை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகுந்த மனவேதனையளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. பொது இடங்களில் ஆட்டை வெட்டி வீடியோ வெளியிடுவது மிகவும் கண்டனத்துக்குரியது. நான் கோவையில் தான் இருக்கப்போகிறேன். திமுகவினருக்கு கோபம் இருந்தால் என் மீது கை வைத்துப் பார்க்கட்டும்.

தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாததற்கு நான் தான் காரணம் என கூறியுள்ள எஸ்.வி.சேகரை எனக்கு யார் என்றே தெரியாது. என்னுடைய செயல்பாடுகளால் தான் பாஜக தமிழகத்தில் இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது என நான் கூறுவேன். மக்களுக்கு நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வோம். தமிழகத்தில் பாஜக படிப்படியாக தான் வெற்றியைப் பார்க்க முடியும். கோவை தொகுதியில் இதற்கு முன்பு போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணனை பெற்ற வாக்குகளை விட நான் பெற்ற வாக்குகள் குறைவு என எஸ்.பி. வேலுமணி அண்ணன் தவறான புள்ளி விவரங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

நாங்கள் கோவை மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். கோவை மக்களின் வாக்கு எங்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. நடிகர் விஜய் உள்ளிட்ட புதியவர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர். 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதில் இருந்தே தெரிந்திருக்கும்” என்றார் அண்ணாமலை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x