Last Updated : 06 Jun, 2024 05:28 PM

1  

Published : 06 Jun 2024 05:28 PM
Last Updated : 06 Jun 2024 05:28 PM

விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: புகார் அளித்த தேமுதிக தகவல்

விருதுநகர் வேட்பாளர் விஜய பிரபாகரன் உடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். | படம்: ம.பிரபு

சென்னை: “விருதுநகர் வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த பின் தேமுதிக வழக்கறிஞர் ஜனார்த்தனன் தெரிவித்தார்.

விருதுநகர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வாக்கு எண்ணிக்கை இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது மற்றும் முன்கூட்டியே முதல்வர் தேர்தல் வெற்றி குறித்து பேசியது தொடர்பாகவும் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார். அத்துடன், தேர்தல் ஆணையத்திலும் விருதுநகர் வாக்கு எண்ணிக்கை குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை சந்தித்த, தேமுதிக வழக்கறிஞர் ஜனார்த்தனன் புகார் மனுவை அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியது: ''விருதுநகர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடுகள் நடைபெற்றதாக குறிப்பி்ட்டு, தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளோம். அப்போதே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் விருதுநகர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் புகார் மனுக்களை அனுப்பியிருந்தோம். ஆனால், தலைமை தேர்தல் அதிகாரி தங்களுக்கு புகார் மனு வரவில்லை என்று கூறிய நிலையில், நேரடியாக மனு அளித்துள்ளோம். அதேபோல், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்திடமும் நேரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் தொகுதியில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. உடனடியாக விசாரிக்க வேண்டும், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளோம். நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அன்று 9 மணிக்கு எங்கள் வேட்பாளர் மற்றும் தலைமை முகவர் உள்ளிட்டோர், எண்ணிக்கை முடிந்துவிட்டது மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றுவிட்டதால் வெளியேற வேண்டும் என்று வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆனால், நள்ளிரவு ஒரு மணிக்குத்தான், அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் தந்துள்ளனர். ஆளுங்கட்சி அமைச்சர்கள் முகாமிட்டிருந்தனர். இதுதவிர மாலை 3 முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரியும் யாரிடமோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டே இருந்தார். இது தொடர்பான வீடியோ பதிவுகள் உள்ளன. தேர்தல் ஆணையம் விசாரித்தால் உண்மை தெரியவரும். மாவட்ட தேர்தல் அதிகாரியிடமே புகார் அளித்தும் பயனில்லை. காவல் துறை உயர் அதிகரிகள் குவிக்கப்பட்டு, எங்களை வெளியேற்றிவிட்டனர். மறு வாக்கு எண்ணிக்கை என்ற எங்களின் கோரிக்கை நிறைவேறாவிட்டால், நீதிமன்றத்தை அணுகுவோம்'' என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, “தேர்தல் நடைமுறை முடிந்த பின் தேர்தல் மனுக்கள் குறித்து உயர் நீதிமன்றம் தான் உத்தரவிட வேணடும். விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொடர்பாக தேமுதிகவிடமிருந்து புகார் எதுவும் வரவில்லை. புகார் வந்தால் தேர்தல் ஆணைய உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, “விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை.” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். அதன் விவரம்: “விஜயபிரபாகரன் தோற்கவில்லை; திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளார்” - பிரேமலதா விஜயகாந்த்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x