Published : 06 Jun 2024 04:46 PM
Last Updated : 06 Jun 2024 04:46 PM
சென்னை: “அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ, எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக் கொள்ளட்டும்” என்று அதிமுக ஐ.டி.விங் விமர்சித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் உட்கட்சி பிரச்சினை இருக்கிறது என்று அண்ணாமலை பேசியதற்கு பதிலடியாக இந்த விமர்சனம் சொல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஐ.டி.விங் தனது எக்ஸ் பக்கத்தில், “அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ, எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல் அதிமுக பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக்கொள்ளட்டும்! ஆடு, ஓநாய், நரி என எது வந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அதிமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பேசியது என்ன? - முன்னதாக, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “2019-ல் அதிமுக ஆளும் கட்சி. அப்போது நடந்த தேர்தலில் மோடி தலைமையில் பாஜக 303 தொகுதிகளில் வென்றது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக உடன் பாஜக கூட்டணியில் இருந்தபோது தமிழகத்தில் பாஜக வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. 2024ல் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று அதிமுகவுக்கு தெரிந்த பிறகு தற்போது பாஜக - அதிமுக ஒன்றாக இருந்தால் 30 தொகுதிகளை வென்றிருப்போம் என்கிறார் எஸ்.பி.வேலுமணி.
அதிமுக தனியாக இருந்தே ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. பிறகு எப்படி ஒன்றாக இருந்தால் 30 சீட் ஜெயிப்போம் என்கிறார். வேலுமணியின் கருத்தை பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் உட்கட்சி பிரச்சினை இருப்பதுபோல் தெரிகிறது. அதிமுக - பாஜக கூட்டணிக்கு பிரிந்தபோது பாஜக மீது குற்றம்சாட்டியவர்கள் தற்போது கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என்கிறார்கள். இதனை பார்க்கும்போது எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணிக்கும் பிரச்சினை இருப்பதாகவே நான் பார்க்கிறேன். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது.
இந்த தேர்தலில் கிடைத்துள்ள பாடம் என்னவென்றால், தமிழகத்தில் அதிமுக தலைவர்கள் எல்லாம் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே. சந்தர்ப்பவாத அரசியல் வேண்டாம் என மக்கள் நினைக்கிறார்கள். கோயம்புத்தூரில் ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் அதிமுக வசம் உள்ளது. இதில் மூன்று தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. அப்படி என்றால் கோயம்புத்தூர் மக்கள் அதிமுகவை நிராகரித்துவிட்டார்கள். இந்த விரக்தியின் உச்சத்தில் தான் எஸ்.பி.வேலுமணி போன்றோர் பேசுகிறார்கள்” என்று பேசியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT