Published : 06 Jun 2024 03:59 PM
Last Updated : 06 Jun 2024 03:59 PM

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 53 லட்சம் பேர்: ஆண்கள் 24 லட்சம்; பெண்கள் 28 லட்சம் 

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், ஆண் பதிவுதாரர்களின் எண்ணிக்கையை காட்டிலும், பெண் பதிவுதாரர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள், சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அலுவலகம் என பல்வேறு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பட்டப் படிப்பு வரையிலான கல்வித்தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்திலும், மருத்துவம், பொறியியல், விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பு தகுதிகளையும், பட்ட மேற்படிப்புத் தகுதிகளையும் மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும்.

இந்தப் பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வர வேண்டும். அப்போதுதான் அந்த பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அமலில் இருக்கும். இல்லாவிட்டால் அது காலாவதியாகிவிடும்.

இந்நிலையில், 2024, மே 31-ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்களின் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்து 48 ஆயிரத்து 663 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 63 ஆயிரத்து 81. பெண்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 85 ஆயிரத்து 301 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 281 பேர்.

மேலும், பதிவுதாரர்களில் 19 முதல் 30 வயதுள்ளவர்கள் 23 லட்சத்து 27 ஆயிரத்து 649 பேர். 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 16 லட்சத்து 93 ஆயிரத்து 40 பேர். 46 வயது முதல் 60 வயது வரை உள்ளோர் 2 லட்சத்து 47 ஆயிரத்து 811 பேர். பிஎட் முடித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 85 ஆயிரத்து 622 ஆகவும், பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 79 ஆகவும் உள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 955 பேர். ஐடிஐ முடித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 825 ஆக உள்ளது. மேலும், பிஇ, பிடெக் முடித்துவிட்டு 2 லட்சத்து 37 ஆயிரத்து 525 பேரும், எம்இ, எம்டெக் படித்துவிட்டு 2 லட்சத்து 6 ஆயிரத்து 544 பேரும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தற்போது அரசுப் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறவில்லை என்றாலும் போட்டித் தேர்வெழுதி சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளும்போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு கேட்கப்படுகிறது. ஒரு சில ஆசிரியர் நியமனங்களின் போது மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பின் போது பதிவு மூப்புக்கு குறிப்பிட்ட அளவு மதிப்பெண் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x