Last Updated : 06 Jun, 2024 12:25 PM

2  

Published : 06 Jun 2024 12:25 PM
Last Updated : 06 Jun 2024 12:25 PM

நிரம்பி வழியும் வந்தே பாரத் ரயில்கள்: ஒட்டுமொத்தமாக 105% புக் ஆனதாக ரயில்வே அதிகாரிகள் தகவல்

வந்தே பாரத் ரயில் | மாதிரி படம்

சென்னை: நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டில் மார்ச் வரை இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் நிரம்பிய இடங்கள் 105.7 சதவீதமாக பதிவாகியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தெற்கு ரயில்வேயில் மட்டும் சென்னை - கோயம்புத்தூர், சென்னை- மைசூரு, சென்னை - திருநெல்வேலி, சென்னை - விஜயவாடா, திருவனந்தபுரம் - காசர்கோடு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்பம், கூடுதல் வசதிகள் கொண்ட இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டில் மார்ச் வரை இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் நிரம்பிய இடங்கள் பொருத்தவரை 105.7 சதவீதமாக இருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் நிரம்பி வழிகின்றன. ஒரு வந்தே பாரத் ரயிலில் 100 இடங்கள் இருந்தால், 110 இடங்கள் வரை புக் ஆகின்றன. பயணிகள் வசதிக்காக இயக்கப்படும் சிறப்பு வந்தேபாரத் ரயில்களும் ஹவுஸ்ஃபுல்லாக செல்கின்றன.

பயணிகள் தேவை அடிப்படையில், நாடுமுழுவதும் பல்வேறு வழித்தடங்களில் 102-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 18,423 ரயில் சேவைகள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக, வந்தே பாரத் ரயில்களில் நிரம்பிய இடங்கள் பொருத்தவரை 105.7 சதவீதம் ஆகும்.

இவற்றில் அதிகபட்சமாக, கேரளாவில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் நிரம்பிய இடங்கள் 175.3 சதவீதமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக 61.7 சதவீதம் ஆண் பயணிகளும், 38.3 சதவீதம் பெண் பயணிகளும் பயணம் செய்துள்ளனர். வந்தே பாரத் ரயில்களில் 26 வயது முதல் 45 வயது வரையுள்ள பயணிகள் அதிகளவில் பயணம் செய்துள்ளனர். வந்தே பாரத் ரயில்கள் இந்த காலக்கட்டத்தில் 97,71,705 கி.மீ. வரை இயக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x