Published : 06 Jun 2024 12:07 PM
Last Updated : 06 Jun 2024 12:07 PM
சென்னை: “மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரையும், இரட்டை இலை சின்னத்தையும் எதிர்த்து நின்றார். அப்படி செய்தவருக்கு எந்த வகையில் அதிமுக தொண்டர்களை அழைப்பதற்கு உரிமை இருக்கிறது. ஜெயலலிதாவை குறிப்பிடுவதற்கு ஓபிஎஸ்ஸுக்கு இனியும் எந்த உரிமையும் இல்லை.” என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஒற்றுமையோடு இணைவோம் என்று கூறி ஓபிஎஸ் அதிமுகவையும், அதிமுக தொண்டர்களையும் இன்னும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அப்படி கூறுவதற்கு அவருக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை. காரணம், அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது, முக்கிய கருவாக இருந்து சோதனைகளை கொடுத்தவர் ஓபிஎஸ். பொதுக்குழு கூடியபோது அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடி, ஆவணங்களை திருடிச் சென்றவர் தான் ஓபிஎஸ். அதிமுகவை முடக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், நீதிமன்றத்தையும் நாடினார்.
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரையும், இரட்டை இலை சின்னத்தையும் எதிர்த்து நின்றார். அப்படி செய்தவருக்கு எந்த வகையில் அதிமுக தொண்டர்களை அழைப்பதற்கு உரிமை இருக்கிறது. ஜெயலலிதாவை குறிப்பிடுவதற்கு ஓபிஎஸ்ஸுக்கு இனியும் எந்த உரிமையும் இல்லை. ஏனென்றால், ஜெயலலிதாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.
மீண்டும் மீண்டும் ஊடகங்களில் ஜெயலலிதாவை விமர்சித்தது பாஜக. ஓபிஎஸ்ஸுக்கு ஜெயலலிதா மீது உண்மையாக பாசம் இருந்தால் அண்ணாமலை பக்கத்தில் உட்கார மனம் வருமா?. தன் சுயநலத்துக்காக ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலையை நல்லவர் என்று கைகுலுக்கிறார் ஓபிஎஸ். இவர் எப்படி இயக்கத்தை ஒன்றிணைய அழைக்க முடிகிறது. அதிமுக தொண்டர்களை ஒன்றிணைய அழைக்க ஓபிஎஸ்ஸுக்கு எந்தவித அருகதையும் இல்லை. எனவே இதுபோன்ற ஓபிஎஸ் அழைக்க கூடாது. ஓபிஎஸ்ஸுக்கு இனி அதிமுகவை பற்றி பேச எந்தவிதமான உரிமையும் இல்லை.
ஜெயலலிதா வீட்டில் பணி செய்ய சென்றவர் சசிகலா. தொடர்ந்து பணி செய்து ஜெயலலிதா இல்லத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு 36 ஆண்டுகாலம் அதிகாரத்தை சுவைத்தவர் சசிகலா. அப்படிப்பட்டவர் அதிமுகவைக் காப்பாற்றுவேன் வாருங்கள் என்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவை போல எந்தவித பிரதிபலனும் இல்லாமல் உங்களுக்காக இருக்கிறேன் என்றுள்ளார். அவர் அறிக்கை வெளியிட்டு 24 மணிநேரம் ஆகிவிட்டது. இந்த 24 மணிநேரத்தில் எத்தனை தொண்டர்கள் அவரின் இல்லத்துக்கு சென்றிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள். குழப்பத்தை தாண்டி எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை ஒருங்கிணைத்து தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 2019 தேர்தலை விட தற்போதையை தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இதிலிருந்தே எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்கு வழிநடத்துகிறார் என்பதை தெரிந்துகொள்ளலாம்." என்று தெரிவித்தார்.
முன்னதாக, “அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.
‘தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’ என்னும் கழக நிறுவனர், எம்ஜிஆரின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம்.
ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT