Published : 06 Jun 2024 05:52 AM
Last Updated : 06 Jun 2024 05:52 AM

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக நிர்வாகியிடம் சிபிசிஐடி 5 மணி நேரம் விசாரணை

கேசவ விநாயகன்

சென்னை: சென்னையில் ரயிலில் ரூ.4 கோடிபறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பாஜக தமிழக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப்.6-ம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி பணம் பிடிபட்டது. நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ரயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டம் டிரைவர் பெருமாள் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

பணம் கை மாறியதாக கூறப்படும் தமிழக பாஜக வர்த்தக பிரிவு தலைவர் கோவர்தனுக்கு சொந்தமான சென்னை பசுமைவழி சாலையில் உள்ள உணவகம், நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழக பாஜகபொருளாளர் எஸ்.ஆர்.சேகரின் வீட்டுக்கு சென்று, சிபிசிஐடி போலீஸார் கடந்த வாரம் விசாரணை நடத்தினர்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேரும் கடந்த 31-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடிஅலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவு வெளியான பின்னர் ஆஜராவதாக தகவல் அனுப்பினர்.

இந்நிலையில, சிபிசிஐடி சம்மனை ஏற்று கேசவ விநாயகன், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை ஆஜரானார். ஒரு மணி நேரத்துக்கு பின்னர் அவரிடம் துணை காவல் கண்காணிப்பாளர் சசிதரன் தலைமையிலான போலீஸார் விசாரணை செய்தனர். அவர் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டது. விசாரணை முழுவதும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

சுமார் 5 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து கேசவ விநாயகன் வெளியே வந்தார். விசாரணையில் வழக்கு தொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. அடுத்து வரும் நாட்களில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 3 பேரும் ஆஜராவார்கள் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம் மறுப்பு: இதற்கிடையே, தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி, சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘தற்போதைய நிலையில் விசாரணைக்கு தடை விதிப்பதோ, சம்மனை ரத்து செய்வதோ விசாரணையை பாதிக்கும். எனவே, சம்மன் உத்தரவின்படி மனுதாரர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x