Published : 06 Jun 2024 06:35 AM
Last Updated : 06 Jun 2024 06:35 AM

மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளால் மாநில கட்சி அங்கீகாரம் பெறும் விசிக, நாம் தமிழர்: தொண்டர்கள் மகிழ்ச்சி

சென்னை: தேர்தல் முடிவுகளால் விசிக, நாம் தமிழர் கட்சி மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெறவுள்ளன.

கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக தேர்தல் அரசியலில் பங்கெடுத்தது விசிக. அப்போது, தமாகாவுடனான கூட்டணியில் பெரம்பலூரில் 1 லட்சம், சிதம்பரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுதமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திருமாவளவன் உருவெடுத்தார்.

தொடர்ந்து 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்குள் நுழைந்தார். அடுத்தடுத்த காலகட்டத்தில் வெற்றியும், தோல்வியையும் மாறி மாறி பெற்ற விசிக, கடந்த மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் மற்றும்பானை சின்னத்தில் போட்டியிட்டது. வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட்டதால் இரு தொகுதிகளையும் வென்ற நிலையிலும் விசிகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான் கட்சியின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதில் விசிக திடமான முடிவெடுத்தது. தேர்தல் ஆணையம், டெல்லி உயர் நீதிமன்றம் என தொடர்ச்சியாக முயற்சித்த போதும் பானை சின்னம் கிடைக்கவில்லை. எனவே, வேட்பாளர்களுக்கான பட்டியலிடப்பட்ட சின்னத்தில் தங்களுக்கான பானை சின்னத்தை விசிகவின் இரு வேட்பாளர்களும் பெற்றனர்.

தற்போது சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 1.03 லட்சம்வாக்குகள் மற்றும் விழுப்புரம்தொகுதியில் துரை.ரவிக்குமார்70,703 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இருதொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியிட்டு விசிக வேட்பாளர்கள் வென்றனர் என்ற அடிப்படையில், விசிகவுக்கு மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "25 ஆண்டு கால தொடர்போராட்டத்தின் விளைவாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற நிலையை விசிக எட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தை அணுகி அங்கீகாரம் கோருவதோடு, பானை சின்னத்தையே விசிகவின் நிரந்தர சின்னமாகவும் கேட்கவுள்ளோம்" என்றார்.

அதேநேரம், 8 சதவீத வாக்குகளுடன் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை நாம் தமிழர் கட்சியும் பெறவிருக்கிறது. தொடக்கம் முதலே கூட்டணியின்றி தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால், கடந்த தேர்தலில் அவர்களுக்கு பெரிதும் கை கொடுத்த கரும்பு விவசாயி சின்னம், இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைத்த மைக் சின்னத்தை வைத்து, தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார் சீமான்.

இதன் பலனாக கடந்த மக்களவை தேர்தலில் பெற்ற 3.90 வாக்குசதவீதத்தைபோல இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதாவது 8.16 சதவீதம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது.

திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக கூட்டணியின்றி அதிகவாக்கு சதவீதத்தை கொண்டிருப்பதால், தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் திகழ்கிறது என்ற கோணத்தில் அணுக வேண்டியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் புதிதாக அறிமுகமான கட்சிகள் பல தற்போது கூட்டணிகளில் இருப்பதால், மாற்றாக நாம் தமிழர் கட்சியை தமிழக வாக்காளர்கள் அங்கீகரித்திருப்பதாகவே நடுநிலை வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் 8 சதவீத வாக்குகள் பெற்றிருப்பதன் அடிப்படையில் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தையும் நாதக பெறவிருக்கிறது.

இவ்வாறு கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 15 ஆண்டுகளில் இந்த இரு கட்சிகள் மட்டுமே மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெறவிருப்பது தொண்டர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x