Published : 06 Jun 2024 07:38 AM
Last Updated : 06 Jun 2024 07:38 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் 50,000 வாக்குகளைக்கூட பெறாததால், அதிமுக தலைமை அதிர்ச்சிய அடைந்துள்ளது.
குமரி தொகுதியில் 22 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிடையே போட்டி நிலவியது.
கத்தோலிக்க கிறிஸ்தவரான அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேத் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெறுவார் எனவும், இந்த வாக்குகள் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவையாக இருக்கும் எனவும் கருதப்பட்டது.
ஆனால், எதிர்பார்க்காத வகையில் அதிமுக மிகக் குறைவாக, 41,393 வாக்குகள் மட்டுமே பெற்றது. நாம் தமிழர் கட்சி 52,721 வாக்குகள் பெற்ற நிலையில், அதிமுக 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
2021 தேர்தலில் குமரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் 1,09,745 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குமரி மாவட்டத்தில் அதிமுகவுக்கு கணிசமான வாக்குகள் இருந்தும், இந்த முறை மிகவும்குறைவாக வாக்குகள் கிடைத்ததற்கான காரணம் குறித்து, அதிமுகதலைமை விசாரித்து வருகிறது.
குறிப்பாக, நிர்வாகிகள் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றவில்லையா அல்லது அதிமுகவினர் கட்சி மாறி வாக்களித்தார்களா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திலேயே குமரி தொகுதியில்தான் அதிமுக மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT