Published : 06 Jun 2024 07:00 AM
Last Updated : 06 Jun 2024 07:00 AM
சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக 7 தொகுதிகள், பாஜக 11 தொகுதிகள் என முக்கிய கட்சிகள் சார்பில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. கடந்த 4-ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், சுயேச்சை என மொத்தம் 950 பேர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் 850-க்கும்மேற்பட்டோர் டெபாசிட் இழந்துள்ளனர்.
ஒரு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 6-ல் ஒருபங்கு வாக்குகளை பெற்றிருந்தால் மட்டுமே டெபாசிட் தொகை, தேர்தல் ஆணையத்தால் திரும்ப வழங்கப்படும். குறைவான வாக்குகளை பெற்றிருந்தால் டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படாது.
டெபாசிட் இழந்த தொகுதிகள்: குறிப்பாக, அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் 34 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில், தென்சென்னை, வேலூர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 7தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். கூட்டணி கட்சியான தேமுதிக திருவள்ளூர், மத்திய சென்னை தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டதில், வடசென்னை, சிதம்பரம், கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய 11 ஆகிய தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
பாஜகவின் கூட்டணி கட்சியான பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டதில் திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 6தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.அதேபோல், பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாபோட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய 3தொகுதிகளிலும், அமமுக போட்டியிட்ட 2 தொகுதிகளில் திருச்சிதொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது.
தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் வழக்கம் போல் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று அல்லது நான்காம் இடத்தை பெற்றிருந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய சென்னையில் 29 பேர்: மத்திய சென்னை தொகுதியில்தான் மிகவும் குறைவான வாக்குகள் (53.96 சதவீதம்) பதிவாகின. இத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 2 லட்சத்து 44 ஆயிரத்து 689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 1,69,159 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். இவரைத் தவிர தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்பட29 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 29 பேர் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT