Published : 01 Apr 2018 12:42 PM
Last Updated : 01 Apr 2018 12:42 PM
மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் அதிகரிக்கும் கட்டிடங்கள், சாலைகள் அழுத்தத்தால் நீர் வழித்தடங்கள் பாதிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் வரை சங்கிலித்தொடர் போல் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை சேகரித்து ஆண்டு முழுவதும் சமவெளிப்பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டத்துக்கும் காட்டாறு, ஓடை மற்றும் ஆறுகளுக்கும் நீர் தரும் சோலைக்காடுகள் மேற்குதொடர்ச்சி மலையில் அதிகமாக உள்ளன.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் சுற்றுலா முக்கியத்துவமும், அது தொடர்பான வளர்ச்சி திட்டங்களும் அதிகரித்துவிட்டன. அதனால், கட்டிடங்கள், சாலைகள், புற்றீசல் போல் பெருகி வருகின்றன. இந்த மலைப்பகுதிகளுக்கு நடுவில், சரிவின் குறுக்கே சாலைகள், கட்டிடங்கள் அமைக்கப்படும்போது ஏற்படும் அழுத்தம், சாலைகளில் செல்லும் கனரக வாகனங்களின் அழுத்தத்தால் நீர் வழித்தடங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால், நீர்வழித்தடங்களில் முன்புபோல் தண்ணீர் வருவதில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் பொறியாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான எக்ஸ். பிரிட்டோராஜ் கூறியதாவது;
மேற்கு தொடர்ச்சி மலை, பொதுவாக கருங்கல்லால் ஆன அமைப்பை உள்ளீடாக கொண்டுள்ளது. மலையின் மேல் பகுதியில் மண்ணின் அளவு குறைந்தும், மலையடிவாரத்தை நோக்கி சரிவுப்பகுதியில் மண்ணின் அடர்த்தி அதிகமாகவும் உள்ளது. பொதுவாக இந்த மண், களிமண் மற்றும் குறுமணல் வகையை சார்ந்ததாகவும் சில பகுதிகளில் செம்மண், சரளை நிலமாகவும் உள்ளன.
கருங்கல் உள்ளீடாக அமைந்த பகுதியில் அதன் மேல் உள்ள மண் படிவத்திற்கு இடையிலான இடைவெளியில் மழை நீர் உட்புகுந்து மலையடிவாரம் வரை சென்று, சமவெளிப்பகுதிகளில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளுக்கு நீர்செறிவூட்டும் அமைப்புகளாக உள்ளன. இந்த அமைப்புகள் சாய்வு பகுதிகளில் சரிவுக்கு ஏற்றவாறு நிலத்தடியினுள் சிறிய, பெரிய நீர் வழித்தடங்களாக தரையை நோக்கி அமைந்துள்ளன.
இந்த சரிவுகளில் கான்கிரீட் கட்டிடங்கள் அமைக்கும்போது அதன் அஸ்திவாரத்துக்கு குறைந்தபட்சம் 6 அடி முதல் அதிகபட்சம் 12 அடி வரையிலான குழிகள் தோண்டப்படுகின்றன. கட்டிடத்தின் நீளத்தைப் பொறுத்து தொடர்ச்சியாக அமையும் இந்த குழிகளால் பூமிக்குள் அமைந்துள்ள நீர் வழித்தடங்கள் தடுக்கப்பட்டு அதன் போக்கு மாற்றப்பட்டு நீர் வீணாகிறது.
எனவே, மலைப்பகுதிகளில் சுற்றுலா என்ற பெயரில் கட்டிடங்கள், சாலைகள் அதிகரிப்பதால் நீர் வழித்தடங்கள் தடுக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது.
மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களின் பயிர்களுக்கு தொடர்ச்சியாக நீர் கிடைக்க இந்த நீர் வழித்தடங்களே அடிப்படையாக உள்ளது. நீர்வழித்தடம் பாதிக்கப்படுவதால், இந்த தோட்டங்கள் பாதிக்கப்படுவதோடு, விளைச்சல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT