Last Updated : 05 Jun, 2024 07:12 PM

 

Published : 05 Jun 2024 07:12 PM
Last Updated : 05 Jun 2024 07:12 PM

தூத்துக்குடியில் 55% வாக்குகள் பெற்ற கனிமொழிக்கு காத்திருக்கும் சவால்கள்!

தூத்துக்குடியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி உடன் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள கனிமொழி 55 சதவீத வாக்குகளைப் பெற்று தனது செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்று, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 2-வது முறையாக களம் கண்ட திமுக வேட்பாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மொத்தம் 5,40,729 வாக்குகள் கிடைத்துள்ளன.

55.26 சதவீதம்: இதன் மூலம் கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 55.26 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் கனிமொழி பெற்ற வாக்கு சதவீதம் சற்று குறைவு தான். 2019 தேர்தலில் கனிமொழி 56.77 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அதேநேரத்தில் கடந்த தேர்தலை விட தற்போது வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் அதிகமாகும். கடந்த முறை 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி, இம்முறை 3,92,738 வாக்கு வித்தியாத்தில் வென்றிருக்கிறார்.

2-வது தாய் வீடு: இந்த வெற்றி மூலம் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்ற முதல் எம்பி என்ற பெருமையை கனிமொழி பெற்றுள்ளார். 2020, 2021-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று காலத்திலும் சரி, 2023 டிசம்பரில் பெய்த பெரும் மழை வெள்ளத்திலும் சரி மக்களோடு மக்களாக களத்தில் நின்று பணியாற்றியதன் மூலம் தூத்துக்குடி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை கனிமொழி பெற்றிருப்பதே இந்த மகத்தான வெற்றிக்கு காரணம் என திமுகவினர் சுட்டிக் காட்டுகின்றனர்.மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது தூத்துக்குடி எனது இரண்டாவது தாய் வீடு என கனிமொழி தொடர்ந்து பேசி வந்தார். அவரது இந்த கருத்தை தூத்துக்குடி மக்கள் அங்கீகரித்திருப்பதாகவே திமுகவினர் பார்க்கின்றனர்.

2-வது இடத்தில் அதிமுக: இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரா.சிவசாமி வேலுமணி 1,47,991 வாக்குகளை பெற்று 2-வது இடத்தை பெற்றுள்ளார். கடந்த முறை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு இத்தொகுதியை விட்டுக் கொடுத்த அதிமுக இம்முறை நேரடியாக களம் கண்டது. ஆனால், தொகுதி மக்கள் மத்தியில் பரிச்சயம் இல்லாத வேட்பாளரை களம் இறக்கியதால் அக்கட்சியின் வாக்கு வெகுவாக குறைந்ததேடு டெபாசிட்டையும் இழந்துள்ளது. அதிமுகவுக்கு இம்முறை 15.12 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

பாஜக கூட்டணியில் தமாகா தூத்துக்குடியில் போட்டியிட்டு 1,22,380 வாக்குகளுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. தூத்துக்குடியைப் பொறுத்தவரை தமாகாவுக்கு என பெரிய வாக்கு வங்கி ஏதும் இல்லை. எனவே, தமாகா வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகள் பாஜக வாக்குகளாகவே பார்க்கப்படுகிறது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 21.77 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். இந்த முறை அதிமுக இல்லாமல் 12.51 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதே தங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சி தான் என பாஜகவினர் கூறுகின்றனர்.

நாதக முன்னேற்றம்: தூத்துக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பல் மருத்துவரான ரொவினா ரூத் ஜேன் 1,20,300 வாக்குகளை பெற்றுள்ளார். பல சுற்றுகளில் அவர் தமாகா வேட்பாளரை விட அதிக வாக்கு பெற்று 3-ம் இடம் பிடித்திருந்தார். கடைசியாக 12.29 சதவீத வாக்குகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு இது மிகப்பெரிய வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2019 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி தொகுதியில் 4.96 சதவீத வாக்கு பங்கீட்டுடன் 49,222 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. இந்த முறை அதைவிட சுமார் 71 ஆயிரம் வாக்குகளை அதிகமாக அக்கட்சி பெற்றுள்ளது. இது அக்கட்சியினரை உற்சாகமடைய செய்துள்ளது.

நோட்டா: இதேபோல் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இம்முறை நோட்டா வாக்கு சதவீதமும் அதிகரித்துள்ளது. கடந்த முறை நோட்டாவுக்கு 9,234 வாக்குகள் பதிவாகி இருந்தன. இது 0.93 சதவீதம் ஆகும். இம்முறை நோட்டாவுக்கு 9,806 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது பதிவான வாக்குகளில் 1 சதவீதம் ஆகும்.

கனிமொழிக்கான சவால்கள்: தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்து மகத்தான வெற்றியை பெற்ற போதிலும் கனிமொழிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. மாநிலத்தில் தங்களது ஆட்சி இருந்த போதிலும் மத்தியில் தங்கள் கூட்டணி ஆட்சி இல்லாததால் பல திட்டங்களை நிறைவேற்ற அவர் கடுமையாக போராட வேண்டியிருக்கும். குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடிக்கு கனிமொழி புதிதாக எந்த ரயிலையும் கொண்டு வரவில்லை என்ற குறை மக்கள் மத்தியில் இருக்கிறது. அந்த குறையை இந்த முறை சரி செய்ய வேண்டும்.

அதுபோல அவரது முயற்சியால் தொடங்கப்பட்ட சர்வதேச ஃபர்னிச்சர் பார்க், மின்சார கார் உற்பத்தி ஆலை, இஎஸ்ஐ மருத்துவமனை போன்ற சில திட்டங்கள் தொடக்க நிலையிலேயே இருக்கின்றன. இந்த திட்டங்கள் முழுமை பெற வேண்டும்.மேலும், தேர்தல் நேரத்தில் அளித்த சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போன்றவை கனிமொழிக்கு பெரும் சவால்களாகவே இருக்கும். இந்த சவால்களை முறியடித்து தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முதல்வர் மீது நம்பிக்கை: தேர்தல் வெற்றியை தொடர்ந்து தூத்துக்குடி நகரில் உள்ள அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘எனது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக ஆட்சியில் இருக்கக்கூடிய அவலங்கள், தொடர்ந்து மக்களை அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய நிலை அக்கட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கியுள்ளது. இதனை மக்கள் தெளிவாக உணர்த்தி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, கடந்த முறையை விட இந்த முறை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கும் நிலையை பார்க்கிறோம். இது திமுக ஆட்சிக்கு கிடைத்திரும் வெற்றி. தமிழகத்தில் பாஜகவுக்கு நிச்சயமாக வருங்காலம் கிடையாது. எங்கள் வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்கள். முதல்வர் மீதான நம்பிக்கையாலும், எதிர்க்கட்சியினர் மீதான நம்பிக்கை இல்லாததாலும் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள்,’ என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x