Last Updated : 06 Jun, 2024 09:53 AM

8  

Published : 06 Jun 2024 09:53 AM
Last Updated : 06 Jun 2024 09:53 AM

தமிழகத்தில் கட்சிகளின் வாக்கு வங்கியில் ஏற்றமும் சறுக்கலும் - ஒரு பார்வை

மக்களவைத் தேர்தல் திருவிழா வாக்கு எண்ணிக்கை நிகழ்வுடன் நிறைவு பெற்ற நிலையில் இப்போது வெற்றி, தோல்வி, வெற்றிகரமான தோல்வி, தோல்விமுகம் கொண்ட வெற்றி எனப் பல பிரிவுகளுக்குள் தங்களைப் பொறுத்திக் கொண்டு கட்சிகள் வாக்கு சதவீத சுயபரிசோதனைக்கு ஆயத்தமாகும் காலம் தொடங்கியிருக்கிறது.

தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கட்சிகள் வென்றெடுத்துள்ளன. புதுச்சேரியிலும் இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. நாற்பதும் நமதே என்ற முழகத்துடன் பிரச்சாரத்தை தொடக்கிய திமுகவுக்கு நிச்சயமாக இது சொல்லி அடித்த வெற்றிதான். இருப்பினும் வாக்கு சதவீதங்கள் தான் கட்சிகளின் பலனை தீர்மானிக்கின்றன.

கட்சிகள் வாரியாக வாக்கு சதவீதம் எவ்வளவு? - தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என்றே கட்சிகள் களம் கண்டன. இந்தத் தேர்தலில் திமுக - 26.93%, அதிமுக - 20.46%, பாஜக - 11.24%, நாம் தமிழர் - 8.19%, காங்கிரஸ் - 10.67%, பாமக - 4.4%, தேமுதிக - 2.59%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2.15%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2.5% வாக்குகள் பெற்றுள்ளன.

நாற்பதிலும் திமுக கூட்டணி வாகை சூடியிருந்தாலும் இந்தத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் மிகுந்த கவனம் பெறுகிறது. தாமரை மலராவிட்டாலும் விதை வலுவாக இடப்பட்டதாக அக்கட்சியினர் மார்தட்டிக் கொள்கின்றனர். தமிழக பாஜகவுக்கு தலைமை சரியாக இருந்து நேக்கு போக்குடன் கூட்டணி அமைத்து இருந்தால் நிச்சயம் மலர்ந்திருக்கும் என்பது சில அரசியல் பிரமுகர்களின் கருத்தாகவும் அண்ணாமலைக்கான சிக்கலாகவும் அமைந்திருக்கிறது.

தென் மாநிலங்களில் பாஜகவின் வீச்சு பெரிய அளவில் இருக்க, தமிழகத்தில் மட்டும் பாஜகவை கணக்கைத் தொடங்கவிடாமல் கட்டுப்படுத்தியுள்ளது திமுக கூட்டணி என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் கூட ஒவ்வொரு தொகுதியிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் குறிப்பிடத்தக்க அளவிலேயே உள்ளன.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், 28 தொகுதிகளில் அதிமுகவும், 11 தொகுதிகளில் பாஜகவும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. ஒருவேளை அதிமுக -பாஜக கூட்டணி அமைந்திருந்தால், தற்போது பெற்ற வாக்குகள் அடிப்படையில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கக் கூடும் என்ற கணக்குகளும் சுழல்கின்றன.

திமுகவுக்கு சரிவு: கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலைவிட, இந்த தேர்தலில் திமுக கூட்டணி மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது, 38 தொகுதிகளில் வெற்றி பெற்று, 53 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இந்த தேர்தலிலும் 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இறுதி நிலவரப்படி, திமுக கூட்டணி 46.97 சதவீதம் வாக்குகளை பெற்றது.

அதேபோல், தனிப்பட்ட முறையில் கடந்த 2019-ல் 33.53% வாக்குகள் பெற்ற திமுக, இந்த தேர்தலில் 26.93% பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிராக அரசு ஊழியர்கள் அதிருப்தி,மின் கட்டணம், பதிவுக் கட்டணம், சொத்து, வீட்டுவரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்களும் அதிருப்தியில் இருப்பதாக என்று எதிர்த்தரப்பினர் தெரிவித்து வந்தது இங்கே கவனிக்கத்தக்கது.

அத்துடன், கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே விலகிய நிலையில், இந்த தேர்தலில் 2019 மக்களவைத் தேர்தலின்போது 3.69 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. எந்த இடங்களிலும் போட்டியிடாத நிலையில், அந்தக் கட்சியின் வாக்குகள் திமுக கூட்டணி வெற்றி சதவீதத்தில் எந்தஅளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்பது தற்போதைய வாக்கு சதவீதத்தில் கணிக்க இயலாததாக உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் பாய்ச்சல்: 2014-ல் பாஜகவின் வாக்கு சதவீதம் 5.56%, 2019-ல் 3.62% என்றிருந்த நிலையில் ஒரே பாய்ச்சலாக இம்முறை 11.24% ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, பாஜக தேசியத் தலைவர் நட்டா என பெரும் பட்டாளமே வந்து சென்றதன் விளைவாகவா அல்லது தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் மீது மக்களுக்கு எழுந்துள்ள அதிருப்தியாலா அல்லது இளைஞர்கள் மத்தியில் பாஜகவுக்கு அதிகரித்துள்ள செல்வாக்கின் காரணமாகவே என்று பல கோணங்களில் இந்த வளர்ச்சியை பின்னர் அணுகலாம், விவாதிக்கலாம்.

ஒரு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள், வேட்பாளர்கள் பெறும் வாக்குகள், வாக்கு வித்தியாசம் போன்ற தரவுகளைக் கொண்டு வாக்கு சதவீதம் கணக்கிடப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு தொகுதியில் அக்கட்சி பெறும் வாக்கு சதவீதம் மொத்தமாக அக்கட்சியின் வாக்கு வங்கியாக பிரதிபலிக்கிறது. அந்த வகையில் 2014-ல் இருந்து இப்போதுவரை பாஜகவின் வாக்கு வங்கி பிரகாசித்து வருகிறது.

சீமான் கட்சிக்கு அங்கீகாரம்: பாஜகவின் வளர்ச்சி இவ்வாறாக இருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிப்பட்ட மாநில அரசியல் கட்சி அந்தஸ்தைப் பெறும் தகுதியைப் பெற்றுள்ளது.

தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாற, சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும் அல்லது மக்களவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும். அல்லது சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இதில் இந்த மக்களவைத் தேர்தலில் சீமானின் கட்சி 8.19% பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக உருவெடுக்கவுள்ளது.

திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக கூட்டணியின்றி அதிக வாக்கு சதவீதத்தை கொண்டிருப்பதால், தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் திகழ்கிறது என்ற கோணத்தில் அணுக வேண்டியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

விசிகவுக்கு பலன்: கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக தேர்தல் அரசியலில் பங்கெடுத்தது விசிக. அப்போது, தமாகாவுடனான கூட்டணியில் பெரம்பலூரில் 1 லட்சம், சிதம்பரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுதமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திருமாவளவன் உருவெடுத்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் மற்றும் பானை சின்னத்தில் போட்டியிட்டது. வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட்டதால் இரு தொகுதிகளையும் வென்ற நிலையிலும் விசிகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 1.03 லட்சம் வாக்குகள் மற்றும் விழுப்புரம் தொகுதியில் துரை. ரவிக்குமார் 70,703 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இருதொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியிட்டு விசிக வேட்பாளர்கள் வென்றனர் என்ற அடிப்படையில், விசிகவுக்கு மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.

தேமுதிக நிலை: பாஜக, நாதகவுக்கு தனிப்பட ஆறுதலை இந்தத் தேர்தல் தேமுதிகவுக்கு எந்தத் தேறுதலையும் அருளவில்லை. அங்கீகரத்தை இழந்த தேமுதிக எத்தனை வியூகம் அமைத்தாலும் அதனை மீட்டெடுக்க முடியாமல் திணறி வருகிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர் (தனி), வடசென்னை ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக, திருவள்ளூர், வடசென்னை ஆகிய தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

விஜயகாந்த் மறைவால் விஜய பிரபாகரனுக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு களம் கண்ட தேமுதிகவுக்கு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அது நினைவாகாமல் போனது. காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடைசி சுற்று வரை கடுமையான போட்டியாக விளங்கினார். குறைந்தளவில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

விஜய பிரபாகரனுக்கு கிடைத்த வாக்குகளில் பாதிக்கும் மேல் அனுதாப வாக்குகள் என்றும் எஞ்சியவை சாதி வாக்குகள் என்றும் சில அலசல்கள் சுட்டிக் காட்டுகின்றன. இருப்பினும், விஜய பிரபாகரன் 3 லட்சத்து 80,877 வாக்குகள் பெற்று அனைவரின் கவனத்தையும் பெறுகிறார். இத்தகைய நிலையில் அடுத்தடுத்த தேர்தல்களில் தேமுதிக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கடும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

காங்கிரஸ்: 2014-ல் மக்கள் நலக் கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸின் வாக்கு சதவீதம் 4.37 ஆக இருந்துள்ளது. அதுவே 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் 12.72 சதவீதமாகவும், இப்போது 2024 தெேர்தலில் 10.67 சதவீதமாகவும் உள்ளது. இந்த முறை தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட்ட 9 இடங்களிலுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்துக்கு காங்கிரஸ் புதிது கிடையாது என்ற வகையில் பாஜக தாங்கள் பெற்ற 11.24% வாக்கு சதவீதத்தை இனி வரும் தேர்தல்களுக்கான முதலீடாகவே கருதும் என்பதில் சந்தேகமில்லை.

அதிமுக எப்படி? - தமிழகக் கட்சிகளில் பிரதானமான அதிமுக 2014-ல் 44.92%, 2019-ல் 19.39%, 2024-ல் 20.46% வாக்கு சதவீதம் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக சரிவை சந்தித்துள்ளது அதிமுக. 2019-ல் அதிமுக 39 தொகுதிகளில் 37-ல் வெற்றி பெற்றது. 2019-ல் அவர் தலைமையில்லாது அதிமுக தேர்தலை எதிர்கொண்டது. இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்து 20.46 சதவீதத்தை பெற்றுள்ளது.

அதிமுகவின் பின்னடைவுக்கு கட்சி பலமான வேட்பாளர்களை நிறுத்தாததே காரணம் என்ற விமர்சனங்கள் இப்போது குவிந்தவண்ணம் உள்ளன. சொற்ப வாக்கு வித்தியாசத்தில் பல இடங்களில் அதிமுக கோட்டை விட்டதாகவும், மதுரை போன்ற அதிமுகவின் வலுவான பெல்ட்டில் வியப்பூட்டும் வாக்கு வித்தியாசத்தில் தோற்று மூன்றாம் இடத்துக்குச் சென்றுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாமக: இந்த மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மொத்தமாக 18,79,689 வாக்குகளை (4.30%) பெற்றுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மொத்தமாக 17,58,774 வாக்குகளை (3.8%) பெற்றது. வடதமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே 4 முதல் 5.5 சதவீத வாக்குகளை பாமக தக்க வைத்து வருகிறது. அதன்படி, இந்த தேர்தலிலும் பாமக தனது வாக்கு சதவீதத்தை தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் இளம் வாக்காளர்களின் பங்கு முக்கியமாக பிரதிபலித்துள்ளது என்ற வகையில் Gen z, Gen alpha வாக்காளர்களை எல்லாம் கவர அரசியல் கட்சிகளின் வியூகங்கள், டெம்ப்ளேட்கள் எல்லாம் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படாவிட்டால், அது மாநிலத்தில் வேரூன்றிய கட்சிகளைக் கடந்து பிற கட்சிகள் தங்களின் வீச்சை பதிவு செய்வதற்கான கதவுகள் திறந்துவைக்கப்படுவதற்கு சமமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x