Published : 05 Jun 2024 05:01 PM
Last Updated : 05 Jun 2024 05:01 PM

“தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பதில் மாற்றுக் கருத்தே இல்லை” - அண்ணாமலை விவரிப்பு

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

சென்னை: “தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் எப்போதும் சிந்தித்துத்தான் ஒரு தீர்ப்பைக் கொடுப்பார்கள். எங்கள் கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைத்து அதை அதிகப்படுத்தியுள்ளனர். ஆனால், அதை எம்.பிக்களாக மாற்ற முடியவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தேசிய அளவில் ஒரு சரித்திரத்தைப் படைத்து, பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கக் கூடிய ஓர் அற்புதமான விஷயத்தை பிரதமர் மோடி செய்து காட்டியிருக்கிறார். தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து உலக அரசியல் வரலாற்றில், மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமருவது ஒரு கடினமான செயல். அதை தேசிய ஜனநாயக கூட்டணி முறியடித்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரவிருக்கிறது. அனைத்து வாக்களர்களுக்கும் நாங்கள் நன்றி கடன்பட்டிருக்கிறோம்.

இந்தியா முழுவதும் பாஜக ஒரு இலக்கை வைத்து பணியாற்றியது. கடினமாக இருந்தாலும், மூன்றாவது முறை ஆட்சிக்கு வரவேண்டும் என்ற இலக்கை வைத்து பணியாற்றினோம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு இலக்கு வைத்து பணியாற்றப்பட்டது. சில மாநிலங்கள் அதை செய்து காட்டின. சில மாநிலங்களில் வெற்றி கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக, வெற்றியைப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருப்பது பெரிய சந்தோஷம். அதேநேரம் தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமாக சேர்ந்து வளர்ந்திருக்கிறோம்.

இக்கூட்டணியின் சார்பாக, இம்முறை மக்களவைக்கு உறுப்பினர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது. அந்த இலக்கை எங்களால் அடையமுடியவில்லை என்பது எங்களுக்கு வருத்தமே. மிக கடுமையாக போராடினோம், ஆனால், தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு உறுப்பினர்களை அனுப்பி வைக்க முடியவில்லை. பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. மக்கள் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதை படிப்பினையாக எடுத்துக் கொண்டு அடுத்து வரும் தேர்தலில், இங்கிருந்து பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவோம். அதற்காக கடுமையாக உழைப்போம். ஏதாவது தவறு நடந்திருந்தால், அதை சரிசெய்வது குறித்து அடுத்த வாரத்தில் பரிசீலிப்போம்.

தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் எப்போதும் சிந்தித்துத்தான் ஒரு தீர்ப்பைக் கொடுப்பார்கள். எங்கள் கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைத்து அதை அதிகப்படுத்தியுள்ளனர். ஆனால், அதை எம்.பிக்களாக மாற்ற முடியவில்லை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஒரு கட்சியாக நாங்கள் ஆதரவு கொடுப்போம். காரணம், பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் தமிழகம் முழுவதும் வந்துசேர வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. மீண்டும் ஒருமுறை, தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு எங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x