Published : 05 Jun 2024 02:07 PM
Last Updated : 05 Jun 2024 02:07 PM
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முழுவதுமாக தோல்வியை தழுவிய நிலையில் இன்று (புதன்கிழமை) பாஜக தலைமையகமான கமலாலயம் வெறிச்சோடி காணப்பட்டது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. பாஜக தமிழகத்தில் 23 இடங்களில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சிகளான பாமக 10 இடங்களிலும், தமாக 3 இடங்களிலும், அமமுக 2 இடங்களிலும், ஓபிஎஸ் சுயேச்சையாக ராமநாதபுரத்திலும் போட்டியிட்டனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஸ்டார் வேட்பாளர்களாக அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், நடிகை ராதிகா உள்ளிட்ட பலர் களம் கண்டனர். இந்நிலையில் இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 10 இடங்களில் வெற்றி பெறும் என பாஜகவினர் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை. தருமபுரியில் மட்டும் பாஜக கூட்டணி வேட்பாளரான சவுமியா அன்புமணி தன்னை எதிர்த்து நின்று வேட்பாளருக்கு 11 சுற்றுகள் வரை கடும் போட்டி கொடுத்தார். ஆனாலும் அவரும் கடைசியில் சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் தோற்றுப் போனார்.
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாததால் தமிழக பாஜகவினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் பாஜக 11 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 21 இடங்களிலும் டெபாசிட் இழந்துள்ளது.
என்றபோதும் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பது அவர்களுக்கு சற்று ஆறுதலை கொடுக்கிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியால் மாநில தலைமையகமான கமலாலயம், பாஜக நிர்வாகிகள் வருகையின்றி வெறிச்சோடி கிடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT