Published : 05 Jun 2024 01:04 PM
Last Updated : 05 Jun 2024 01:04 PM
மேட்டூர்: தேர்தல் முடிவுகள் காரணமாக, அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியில் மாவட்ட எஸ்பி அருண் கபிலன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
தருமபுரி மக்களவைத் தொகுதியில் தருமபுரி, பென்னாகரம், பாலக்காடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளும், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் தொகுதியும் இடம் பெற்றுள்ளன. இந்த தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் மணி, அதிமுக வேட்பாளர் அசோகன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உள்பட 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி போட்டியிட்டதால் நட்சத்திரத் தொகுதியாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 4) நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது 11 சுற்றுகள் வரை பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலையில் இருந்தார். பின்னர், 12-வது சுற்றில் இருந்து திமுக வேட்பாளர் மணி முன்னிலை பெறத் தொடங்கினார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் மணி பாமக வேட்பாளர் சவுமியாவை விட, 21,300 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். நட்சத்திர தொகுதியாக பார்க்கப்பட்ட தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தோல்வி அடைந்தது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேட்டூர் தொகுதி எம்எல்ஏ-வாக பாமகவைச் சேர்ந்த சதா சிவம் உள்ளார். இந்தத் தொகுதியில் நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் பாமகவை விட, திமுக கூடுதலாக வாக்குகளைப் பெற்றுள்ளது. தற்போது, பாமக தோல்வி அடைந்த நிலையில், அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது என உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதனால், மாவட்ட எஸ்பி அருண் கபிலன் தலைமையில் ஒரு ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பி-க்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீஸார் மேட்டூர் தொகுதி முழுவதும் நேற்றிரவு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொகுதியில் மேட்டூர், கொளத்தூர், கருமலைக்கூடல், மேச்சேரி ஆகிய 4 காவல் நிலையங்கள் உள்ளது. இதில் ஒரு காவல் நிலையத்திற்கு ஒரு டிஎஸ்பி உள்பட 25 போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment