Published : 05 Jun 2024 11:22 AM
Last Updated : 05 Jun 2024 11:22 AM

ஸ்ரீபெரும்புதூர் | 8-வது முறையாக வென்ற திமுக டி.ஆர்.பாலு; 29 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

திமுக பொருளாளர் டி.ஆர். பாலு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 8-வது முறையாக திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வென்றுள்ளார். இம்முறை அதிமுக வேட்பாளரை விட 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம் இந்தத் தொகுதியில் 26,465 வாக்குகள் பெற்று 5-வது இடத்தை நோட்டா பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் தவிர்த்து தமாகா, நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம்: 14,35,243. இதில் ஆண் வாக்காளர்கள் 7,30,030 பேர், பெண் வாக்காளர்கள் 7,05,159 பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 54 பேர். பதிவான வாக்கு சதவீதம் 60.25 ஆகும். திமுக, அதிமுக, தமாக, நாம் தமிழர் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலிருந்தே திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்து வந்தார். இதனால் காலை முதலே வாக்கு எண்ணும் மையம் மற்றும் தொகுதியின் பல்வேறு இடங்களில் திமுகவினர் வெடி வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

முதல் சுற்றில் இருந்து 32-வது சுற்றுவரை டி.ஆர். பாலு தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்தார். இறுதியாக 7,58,611 வாக்குகள் பெற்று டி.ஆர்.பாலு வெற்றி பெற்றதாக ஆட்சியர் ச.அருண்ராஜ் அறிவித்தார். இதையடுத்து டி.ஆர்.பாலு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
திமுக - டி.ஆர்.பாலு:- 7,58,611
அதிமுக - பிரேம்குமார் : 2,71,582
தமாகா - வேணுகோபால் - 2,10,222
நாம் தமிழர் - ரவிச்சந்திரன் : 1,40,201
நோட்டா - 26,465

தபால் வாக்குகளில் செல்லாதவை- 447, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேசிய கட்சி, சிறிய கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி நோட்டா 26,465 வாக்குகள் பெற்று 5-வது இடத்தை பிடித்தது.

2029 மக்களவைத் தேர்தலில் டி.ஆர்.பாலு 7,93,281 வாக்குகள் பெற்றார். அப்போது 5,07,955 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலை காட்டிலும், இந்தத் தேர்தலில் 34,670 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதியில் 8-வது முறையாக டி.ஆர்.பாலு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிச் சான்றிதழ் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “முதல்வரின் கடின உழைப்பால் திமுக கூட்டணி 40 /40 வெற்றி பெற்றுள்ளது. இப்போது இந்தத் தொகுதியிலிருந்து 8-வது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இதுவரை இந்தத் தொகுதி மக்களுக்காக நான் ஆற்றி வந்துள்ள பணிகளை இன்னும் செம்மையாகச் செய்வேன்” என்றார்.

29 பேர் டெபாசிட் இழப்பு: ஸ்ரீபெரும்புதுர் தொகுதியில் போட்டியிட்ட தமாகா, நாம் தமிழர் வேட்பாளர் உள்பட 29 பேர் டெபாசிட் இழந்தனர். மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே அவர்களது டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை பொறுத்தவரை 14,35,243 வாக்குகள் பதிவானது. அந்தவகையில், போட்டியிட்ட 31 வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் ஆகிய இருவரைத் தவிர பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தமாக வேட்பாளர் வேணுகோபல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 29 பேர் தங்களது டெபாசிட்டை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x