Published : 05 Jun 2024 06:10 AM
Last Updated : 05 Jun 2024 06:10 AM
சென்னை: பரங்கிமலை - பழவந்தாங்கல் இடையே ரயில் பாதையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மின்சார ரயில் சேவை நேற்று மாலை ஒன்னே கால் மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பயணம் செய்து வருகின்றனர். அதிலும், காலை, மாலை வேளைகளில் மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், பரங்கிமலை - பழவந்தாங்கல் இடையே ரயில் தடத்தில் உயர்மட்ட மின்பாதையில் நேற்று மாலை 5.30மணிக்கு திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
உயர்மட்ட மின்பாதை: தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், ரயில்வே பொறியாளர்கள், பணியாளர்கள் அங்கு விரைந்து வந்து, உயர்மட்ட மின்பாதையில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அதேநேரம், கடற்கரை - தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.
இதற்கிடையில், பரங்கிமலை - பழவந்தாங்கல் இடையே ரயில்வே மின்பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு நேற்று மாலை 6.45 மணிக்கு சரி செய்யப்பட்டது. இதையடுத்து, தாம்பரம் - சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் சேவை மீண்டும் இயங்கத் தொடங்கின. தொழில்நுட்ப கோளாறால், 1.15 மணி நேரம் வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT