Published : 05 Jun 2024 12:45 AM
Last Updated : 05 Jun 2024 12:45 AM
சிதம்பரம்: திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட 1,03,554 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிப்பெற்றார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதிமுக சார்பில் சந்திரகாசன், பாஜக சார்பில் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜான்சிராணி உட்பட 14 பேர் போட்டியிட்டனர்.
சிதம்பரம் தொகுதியில் பதிவான வாக்குகள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தத்தனூரில் நேற்று எண்ணப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில், அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், முதல் சுற்றிலிருந்தே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முன்னிலை வகித்து வந்தார். இதனால் காலை முதலே வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெடி வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.
ஒவ்வொரு சுற்றிலும் கூடுதல் வாக்குகளை பெற்று வந்த திருமாவளவன் 17-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளரை விட ஒரு லட்சத்து 656 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார். தொடர்ந்து 24 சுற்றுகள் முடிந்த நிலையில், 1,03,554 வாக்குகள் பெற்று திருமாவளவன் வெற்றிப்பெற்றதாக ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்தார். இதையடுத்து திருமாவளவனுக்கு வெற்றிப்பெற்றதற்கான சான்றிதழை ஆட்சியர் வழங்கினார். உடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உடனிருந்தார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் திருமாவளவன் வெற்றிப்பெற்றதையடுத்து விசிக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று வெடிவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வாழ்த்து: திருமாவளவன் வெற்றிப்பெற்றதையடுத்து, வாக்கு எண்ணும் மையத்துக்கு நேற்று இரவு 9.30 மணிக்கு வந்த மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், திருமாவளவனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 4,01,530 வாக்குகள் பெற்று 2-வது இடத்தையும், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 1,68,493 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி 65,589 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தனர். 10 சுயேச்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி நோட்டா 8,761 வாக்குகள் பெற்றது.
சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்: நீலமேகம் (பகுஜன் சமாஜ்) - 3,203, தாமோதரன் -1,642 , அர்ச்சுணன் - 1,836 , இளவரசன் -586 , சின்னதுரை -638 , தமிழ்வேந்தன் -3,065 , பெருமாள் - 2,239 , ராதா - 1,280 , ராஜமாணிக்கம் -1,087 , வெற்றிவேல் -2,041.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இதே சிதம்பரம் தொகுதியில் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகரை விட 3,219 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT