Published : 04 Jun 2024 09:04 PM
Last Updated : 04 Jun 2024 09:04 PM

நாற்பதும் திமுக கூட்டணிக்கே! - தமிழகத்தில் அதிமுக+, பாஜக+ ‘வாஷ் அவுட்’

சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியை வாஷ் அவுட் செய்து 40 இடங்களையும் திமுக கூட்டணியே வென்றுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியிலும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என 4 முனைப் போட்டியுடன் தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில் மற்ற தென் மாநிலங்களில் பாஜகவின் வீச்சு பெரிய அளவில் இருக்க தமிழகத்தில் மட்டும் பாஜகவை கணக்கைத் தொடங்கவிடாமல் கட்டுப்படுத்தியுள்ளது திமுக கூட்டணி.

கவனம் பெறும் பாஜகவின் வாக்கு சதவீதம்: இருப்பினும், இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பல்வேறு இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் இரண்டாம் இடம் பிடித்து அதிமுகவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி அந்தக் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றது. மேலூர், மதுரை வடக்கு, மதுரை மேற்கு தொகுதிகளில் பாஜகவை விட அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

சறுக்கிய பாமக: தமிழகத்தில் காலை முதலே தருமபுரியில் பாமக நம்பிக்கை நட்சத்திரத்தை ஒளிரச் செய்து கொண்டிருக்க பிற்பகலுக்கு மேல் பின் தங்கியது. ஒரு கட்டத்தில் திமுக வேட்பாளர் அ.மணி வெற்றியைப் பதிவு செய்தார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகள் வருத்தமளித்தாலும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால் அதை பா.ம.க. ஏற்றுக் கொள்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீலகிரியில் ஆ.ராசா 3வது முறையாக வெற்றி: நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ ராசா வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நீலகிரி எம்பி ஆக பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் , திமுகவின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அங்கீகரித்து தமிழக மக்கள் இந்த வெற்றியை வழங்கி இருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை தோல்வி: கோவையில் வெற்றி நிச்சயம் என அண்ணாமலை முழங்கிய நிலையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “கோவை தொகுதியில் வெற்றி என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். தமிழக முதல்வர் விடிவை ஏற்படுத்தி கொடுப்பார் என மக்கள் நம்புகின்றனர். சென்னைக்கு அடுத்து கோவை போன்ற தொழில் நகரம் தனித்தன்மை இழந்து வரும் நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும்.” என்றார்.

’மோடி அலை எனும் மாயை’ - சிதம்பரம் தொகுதியின் வெற்றி வேட்பாளரான திருமாவளவன், “சென்ற முறை பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது ஒரு மாயை. அது உண்மை அல்ல. மோடி அலை என்பது ஒரு மாயை. அது உண்மை இல்லை என மக்கள் இப்போது நிரூபித்துள்ளார்கள்.” என்று கூறினார்.

காங்கிரஸ் பளிச்: தமிழகம், புதுச்சேரி எனப் போட்டியிட்ட 10 இடங்களிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் வெற்றியை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடி வருகிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் வைத்திலிங்கம் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மைத்திற்க்கு வெளியே பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பகல் கனவு கண்ட தமிழிசை போன்ற ஊர்க்குருவிகளுக்கு தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டி இருக்கிறார்கள்-மக்கள் விரோத பாசிச பாஜக தமிழ் மண்ணில் வேரறுக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான இரா.சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: அத்தனைக்கும் முத்தாய்ப்பாக, ”பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தான வெற்றியாக; வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக அமைந்திருக்கிறது! தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு - இந்திய ஜனநாயகத்தையும் அரசியல்சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளைத் தி.மு.க. தொடர்ந்து முன்னெடுக்கும்." என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கமல் வாழ்த்து: ‘இந்தியாவைக் காக்கும் போரில், திமுகவுடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி, இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டக்கூடியவை’என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்

தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றதாகவும், புகார் எதுவும் வரவில்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x