Last Updated : 04 Jun, 2024 07:26 PM

2  

Published : 04 Jun 2024 07:26 PM
Last Updated : 04 Jun 2024 07:26 PM

மதுரை தொகுதியில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்துக்கு முன்னேறிய பாஜக!

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் இரண்டாம் இடம் பிடித்து அதிமுகவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி அந்தக் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மதுரை தொகுதியில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக சு.வெங்கடேசன், அதிமுக சார்பில் ராஜ்சத்யன், அமமுக வேட்பாளராக டேவிட் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் இருந்தது. அமமுக தனித்து போட்டியிட்டது. இதில் சு.வெங்கடேசன் 4,47,075 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராஜ்சத்யன் 3,07,680, டேவிட் அண்ணாதுரை 85,747 வாக்குகள் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 85,048 வாக்குகள் பெற்றார்.

இந்த தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனி அணி அமைத்துப் போட்டியிட்டது. அமமுக பாஜக கூட்டணியில் இடம் பெற்றது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சு.வெங்கடேசன், வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்பட்டார். பாஜக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராம.சீனிவாசனும் அதிமுக வேட்பாளராக கட்சியின் புதிய வரவான மருத்துவர் சரவணனும் நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யாதேவியும் நிறுத்தப்பட்டனர்.

இத்தேர்தலில் 9 லட்சத்து 81 ஆயிரத்து 623 வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் இன்று மொத்தம் 25 சுற்றுகளில் எண்ணப்பட்டன. இதில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 323 வாக்குகள் பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் 2 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்குகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். அதிமுக வேட்பாளர் சரவணன் 2 லட்சத்து 4 ஆயிரத்து 804 வாக்குகள் பெற்று 3ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 92 ஆயிரத்து 979 வாக்குகள் பெற்று 4ம் இடம் பிடித்தார்.

வாக்கு எண்ணிக்கையில் முதல் 8 சுற்றுகள் வரை அதிமுக வேட்பாளர் 2-வது இடத்திலும், பாஜக வேட்பாளர் 3வது இடத்திலும் இருந்தனர். 9-வது சுற்றில் பாஜக வேட்பாளர் 2ம் இடத்துக்கு முன்னேறினார். அதன் பிறகு இறுதிச் சுற்றுவரை அவர் 2ம் இடத்தில் இருந்தார். இறுதியில் அதிமுக வேட்பாளரை விட 16,110 வாக்குகள் அதிகம் பெற்று ராம.சீனிவாசன் 2ம் இடம் பிடித்தார்.

இதே போல் தபால் வாக்குகளிலும் ராம.சீனிவாசன் 2ம் இடம் பிடித்தார். மொத்தம் 6,593 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் 1,247 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. எஞ்சிய வாக்குகளில் சிபிஎம்முக்கு 2,122, பாஜகவுக்கு 1,879, அதிமுகவுக்கு 642, நாம் தமிழர் கட்சிக்கு 493 வாக்குகள் கிடைத்தன. நோட்டாவுக்கு 100 வாக்குகள் கிடைத்தன. மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றது. மேலூர், மதுரை வடக்கு, மதுரை மேற்கு தொகுதிகளில் பாஜகவை விட அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து அந்த தொகுதியில் 2 ஆண்டுக்கு மேலாக தேர்தல் பணியாற்றி வந்தார். விருதுநகர் தொகுதியை நடிகை ராதிகா கேட்டதால் ராம.சீனிவாசன் மதுரை தொகுதியில் நிறுத்தப்பட்டார். அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் மதுரையில் அதிமுக சார்பில் அதிமுக முன்னணி தலைவர்கள் யாரும் போட்டியிட முன்வரவில்லை. இதனால், பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த மருத்துவர் சரவணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மதுரை தொகுதியில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக அதிக வாக்குகள் வாங்கியது அதிமுக தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x