Published : 04 Jun 2024 06:01 PM
Last Updated : 04 Jun 2024 06:01 PM
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பாமக எதிர்கொண்டது. மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெறவில்லை.
இந்த சூழலில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது. “தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. மக்கள் நலனுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் முன்வைத்து மக்களவைத் தேர்தலில் களமிறங்கி போராடிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி கிடைக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் களத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான மக்களின் மனநிலையை நன்றாக பார்க்க முடிந்தது. ஆனாலும், ஆளும் கூட்டணியே அனைத்து இடங்களிலும் வென்றுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனாலும், ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். மக்களவைத் தேர்தலில் அவர்கள் அளித்த தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி தலைவணங்கி ஏற்கிறது. அவர்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்.
தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்து மக்களின் பிரச்சினைகளுக்காக போராடுவதை பாட்டாளி மக்கள் கட்சி அதன் முதன்மைக் கடமையாகக் கொண்டிருக்கிறது. அதே நிலை தொடரும். இனிவரும் காலங்களிலும் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்காகவும், நலன்களுக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் தொடரும். மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் பாமக ஓயாது.
மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், அந்தப் பணியில் அவர்களுக்கு துணை நின்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களவைத் தேர்தலில் பாமக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT