Published : 04 Jun 2024 03:29 PM
Last Updated : 04 Jun 2024 03:29 PM
வாலாஜா: அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் 6வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 1 லட்சத்து 922 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. அரக்கோணம், ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், காட்பாடி, திருத்தணி என 6 சட்டப்பேரவை தொகுதிகள் அரக்கோணம் மக்களவை தொகுதியில் உள்ளடக்கியுள்ளது. தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திமுக சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன், அதிமுக சார்பில் ஏ.எல். விஜயன், பாஜக கூட்டணியின் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்சிய நஸ்ரின் உள்ளிட்ட 27 பேர் போட்டியிட்டனர். அரக்கோணம் மக்களவைத் தேர்தலில் 27 பேர் போட்டியிட்டாலும், திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடையேதான் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார்.
முதல் சுற்றில், திமுக -27,205 வாக்குகளும், அதிமுக 12,214 வாக்குகளும்,பாமக 10,640 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 4,238 வாக்குகள் பெற்றனர். 2வது சுற்றில் திமுக 55,231 வாக்குகளும், அதிமுக 25,120, பாமக 21,372 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 8,587 வாக்குகளும் பெற்றனர். 3வது சுற்றில் திமுக 79,822 வாக்குகளும், அதிமுக 37,202 வாக்குகளும், பாமக 31,614 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 12,815 வாக்குகளும், 4வது சுற்றில் திமுக 1,0,9602 வாக்குகளும், அதிமுக 49,802 வாக்குகளும், பாமக 40,946 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 17,298 வாக்குகளும் பெற்றனர். 5வது சுற்றில், திமுக 1,43,714 வாக்குகளும், அதிமுக 62,207 வாக்குகளும், பாமக 50,207 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 21,821 வாக்குகளும் பெற்றனர்.
6வது சுற்று முடிவில், திமுக 1,74,917 வாக்குகளும், அதிமுக 73,995 வாக்குகளும், பாமக 57,509 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 26,385 வாக்குகள் பெற்றனர். 6வது சுற்று முடிவின்படி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை பின்னுக்கு தள்ளி 1,00,922 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாலும், தமிழகம் முழுவதும் பெரும்பாலான தொகுதியில் திமுக முன்னிலை வகித்து வருவதாலும் திமுகவினர் உற்சாகமடைந்து, வாலாஜாபேட்டை வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அரக்கோணம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி, தேர்தல் பொது பார்வையாளர் சுனில்குமார், காவல் பொது பார்வையாளர் சத்யத்ஜித்நாயக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆகியோர் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 600க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT